இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 7
7
நான்கு சம்பவங்கள்:
1) 2014ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி,
தெலுங்கானா இந்தியாவின் 28வது மாநிலமாக உதயமானது.
2) 2019 சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு
ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.
3) ஜனவரி 26, 2020இல் தாத்ரா மற்றும்
நாகர் ஹவேலியும், டாமன் மற்றும் தையு என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டன.
4) கடைசி சம்பவம் கடந்த வருடம் நடந்த
ஜி 20 மாநாட்டில் "இந்தியாவின் பிரதமர்" என்று அழைப்பதற்கு
பதிலாக "பாரதத்தின் பிரதமர்" என்று அழைக்கப்பட்டது.
இதெல்லாம் எப்படி நடைபெற்றது
யார் அதிகாரம் கொடுத்தார்கள் போன்ற விஷயங்களை தான் இந்த அத்தியாயத்தில் பார்க்க போகிறோம். இந்திய
அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஒன்றிலிருந்து நான்கு வரை இந்திய ஒன்றியம் மற்றும்
அதன் நிலவரையறை பற்றி கூறுகிறது.
சட்டப்பிரிவு 1:
"இந்தியா என்னும் பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்"
இந்த
சொல்லாடல் மிகவும் முக்கியம். காரணம் ஒன்றியம்(Union) என்பதற்கும் கூட்டாட்சி(Federation)
என்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்திய ஒன்றியத்தில் இருந்து எந்த மாநிலங்களும்
பிரிந்து செல்ல இயலாது. அரசியலமைப்பு இதற்கான அதிகாரத்தை வழங்கவில்லை. இந்திய மாநிலங்கள்
என்பது ஒன்றிய அரசுக்கு கட்டுப்பட்டது. இந்தியாவிற்கு "இந்தியா" மற்றும்
"பாரதம்" என்ற இரண்டு பெயர்கள் இருப்பதால்தான் கடந்த ஆண்டு நடந்த ஜி20 மாநாட்டில்
"பாரத்" என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது.
இங்கு யாருக்கும் பெயர்கள் மீது ஆட்சேபனை இல்லை. அது பயன்பட்டுத்தப்பட்ட அரசியல் நோக்கம் தான் உறுத்துகிறது. எதிர்க்கட்சி கூட்டணிகள் ஒன்றாகி தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என்ற பெயரை வைத்த தருணத்தில் இருந்து "இந்தியா" என்ற பெயரை பயன்படுத்த மாட்டோம் என்று ஆளும் கட்சியினர் முடிவு செய்துவிட்டனர். அரசியல் காரணங்களுக்காக பெயர்களை மாற்றி விளையாடுவது இந்த அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. முன்பு திட்டங்களின் பெயர்கள் தான் மாற்றப்பட்டன இன்றோ நாட்டின் அரசியலமைப்பில் கூட பெயர் மாற்றம் செய்யும் அளவு துணிந்து விட்டனர்.
சட்டப்பிரிவு
2: புதிய மாநிலங்களை ஏற்றுக் கொள்ளுதல் அல்லது நிறுவுதல்.
1950ல்
சிக்கிம் என்னும் நம் அண்டை நாடு, நம்மிடம் பாதுகாப்பு கேட்டு கோரிக்கை வைத்தனர். இந்திய
துணைக்கண்டத்தின் புவி அரசியலின் ஒரு முக்கியமான புவியியல் அமைப்பில் சிக்கிம் இருந்ததால்
இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. பின் 26-04-1975ல் இந்தியாவின் ஒரு மாநிலமாக சிக்கிம்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தியாவிற்கு சொந்தமில்லாத நிலப்பரப்பை ஒரு புதிய மாநிலமாக
நிறுவவோ அல்லது ஏற்கனவே இருக்கும் வேறு ஒரு நாட்டின் நிலப்பரப்பை இந்தியாவுடன் இணைக்கவோ
இந்த சட்டம் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.
சட்டப்பிரிவு
3: புதிய மாநிலங்களை உருவாக்குதல் அல்லது ஏற்கனவே இருக்கும் மாநிலங்களின் எல்லைகள்
மற்றும் பெயர்களை மாற்றம் செய்தல்.
1.
மெட்ராஸ் - தமிழ்நாடு (1969)
2.
திருவிதாங்கூர்-கொச்சி -கேரளா (1956)
3.
மைசூர் -கர்நாடகா (1973)
4.
பம்பாய் -மகாராஷ்டிரா (1960)
5.
கிழக்கு பஞ்சாப் -பஞ்சாப் (1950)
6.
ஐக்கிய மாகாணங்கள் -உத்தரப் பிரதேசம் (1950)
7.
ஒரிசா -ஒடிசா (2011)
8.
பாண்டிச்சேரி - புதுச்சேரி (2006)
9.
வங்காளம் -மேற்கு வங்காளம் (1950)
10.
ஆந்திரா -ஆந்திர பிரதேசம்,தெலுங்கானா.(2014)
11.
ஜம்மு காஷ்மீரை பிரித்தது, யூனியன் பிரதேசங்களை ஒன்றாக்கியது.
இது
போன்ற நடவடிக்கைகளை இந்த சட்டப்பிரிவின் மூலமாக தான் மேற்கொண்டார்கள். இந்த பெயர் மாற்றம்
அல்லது எல்லைகளை மாற்றம் செய்வது போன்றவைகளை மேற்கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு
மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்லைகளை மாற்றம் செய்தல், பெயர் மாற்றம் செய்தல்
போன்றவைகள் சட்ட மசோதாவாக குடியரசு தலைவர் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசு
தலைவர் இந்த மசோதாவை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைப்பார்.
பின் அவை அந்த மாநிலத்தில் விவாதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு தங்களின் பரிந்துரைகளை
அனுப்பி வைப்பார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குடியரசு தலைவர் மாநிலங்கள்
அனுப்பிய பரிந்துரைகளை நிராகரிக்கலாம் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது பொருட்படுத்தாமலும்
விட்டுவிடலாம். இதே யூனியன் பிரதேசம் என்றால் வெறும் நாடாளுமன்றத்தின் அனுமதியே போதுமானது.
இங்கு ஒரு விஷயம் தெளிவாகிறது மாநிலத்தின் பெயரிலோ அல்லது நிலப்பரப்பிலோ மாற்றம் செய்ய
மாநில அரசுக்கு துளியும் அதிகாரம் இல்லை, ஒட்டுமொத்த அதிகாரமும் மத்திய அரசிடம் தான்
உள்ளது. இதைத்தான் "அழிந்துவிடும் மாநிலங்களின் அழியா ஒன்றியம்" என்று இந்தியாவை
குறிப்பிட்டனர்.
சட்டப்பிரிவு
4: 2,3 ஆகிய சட்டப்பிரிவுகளின் படி இயற்றப்படும் சட்டங்கள் முதலாம்,நான்காம்
இணைப்பு பட்டியலை(schedules) திருத்துவதற்காகவும் துணைவுறு, சார்வுறு, விளைவுறு போன்ற
பொருட்பாடுகளுக்காகவும் வகைசெய்தல்.
இந்த
சட்டப்பிரிவு குறிப்பிடுவது என்னவென்றால் சட்டப்பிரிவு இரண்டு மற்றும் மூன்றின் மூலம்
மேற்கொள்ளப்படும், மாநில எல்லை அல்லது பெயர் திருத்தங்களை அரசியலமைப்பு திருத்தமாக
கருதக்கூடாது. அப்படி என்றால் சட்டப்பிரிவு இரண்டின் மூலம் மற்றொரு நாட்டின் எல்லையை
ஆக்கிரமிப்பு செய்யவோ அல்லது நம் நாட்டின் ஒரு பகுதியை மற்ற நாட்டிற்கு கொடுக்கவோ நாடாளுமன்றத்திற்கு
முழு அதிகாரம் இருக்கிறது என்று பொருளாகுமா ?
இங்கு
தான் பெருபாரி வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. முதலில் பெருபாரி வழக்கை பற்றி சொல்லகிறேன்.
பெருபாரி பிரச்சனை என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே 1947-இல் பிரிவினைக்குப்
பின் உருவான நிலப்பிரச்சனை ஆகும். பிறகு, வங்காளதேசம் உருவானபோது, இந்த பிரச்சனை வங்காளதேசத்துடனான
பிரச்சனையாக மாறியது. இதை காலவரிசை அடிப்படையில் பார்ப்போம்:
1947: இந்தியாவின் பிரிவினைக்குப் பின்,
ரேட்கிளிப் வரம்பு (Radcliffe Line) அமைக்கப்பட்டது. இதில், மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரி
மாவட்டத்தில் உள்ள பெருபாரி பகுதி இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆயினும், எல்லை வரைபடங்களில்
தெளிவாக குறிப்பிடப்படாததால், இந்த பகுதி இந்தியாவுக்கா சொந்தமானதா? அல்லது பாகிஸ்தானுக்கா
சொந்தமானதா? என்ற குழப்பம் ஏற்பட்டது.
1952: பாகிஸ்தான், பெருபாரி பகுதியை தனது பகுதியாக அறிவித்தது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலப்பிரச்சனை மேலும் தீவிரமடைந்தது.
1958: இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும்
பாகிஸ்தான் பிரதமர் பெரோஷா நூன் இடையே "நேரு-நூன் ஒப்பந்தம்"
(Nehru-Noon Agreement) கையெழுத்தானது.
நேரு-நூன் ஒப்பந்தத்தின் பின்னணி
(1958):
நேரு-நூன் ஒப்பந்தத்தின்
மூலம் பெருபாரியின் ஒரு பகுதியை இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைக்கும் திட்டம் இருந்தது.
இதற்கான 9வது அரசியலமைப்புத் திருத்தம் (1960) கொண்டு வரப்பட்டது. இதன்படி, பெருபாரியின்
பகுதியை இரு நாடுகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.
1960: இந்திய உச்ச நீதிமன்றம், இந்த ஒப்பந்தத்தை
செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இதையடுத்து, இந்திய அரசாங்கம் 9வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 1960 (9th
Constitutional Amendment Act, 1960) மூலம், பெருபாரியின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு
ஒப்படைத்தது.
1971: வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து
சுதந்திர நாடாக உருவானது.பெருபாரி பிரச்சனை 1958-ல் நேரு-நூன் ஒப்பந்தம் மூலம் தீர்ந்தது
என கருதப்பட்டாலும், பல காரணங்களால் இது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில் சிரமம்
ஏற்பட்டது. நேரு-நூன் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில்
உள்ளூர் மக்களின் எதிர்ப்பு அதிகமாக இருந்தது. பெருபாரி பகுதியை ஒப்படைக்க இந்திய அரசியலமைப்பில்
திருத்தம் செய்தாலும், அங்கிருந்த மக்களுக்கான சொத்து உரிமை, குடியுரிமை போன்ற பிரச்சனைகள்
தீர்க்கப்படவில்லை.
இதனால், அந்த நிலப்பகுதி இந்தியா
மற்றும் பாகிஸ்தான் இடையே "ஆக்கப்பூர்வமில்லாத பிரச்சனை" ஆக நீடித்தது.
1971-இல் பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்து புதிய நாடாக உருவானபோது, பெருபாரி
பிரச்சனை வங்கதேசத்துடனான பிரச்சனையாக மாறியது. நேரு-நூன் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட
பல நிலப்பங்கீட்டு விவகாரங்கள் வங்கதேசத்துடனும் மீண்டும் ஒப்பந்தம் செய்ய வேண்டிய
நிலை ஏற்பட்டது.
என்கிளேவுகள்
(Enclaves)
இந்தியா
மற்றும் வங்கதேசம் இடையே பல என்கிளேவுகள்(வேறொரு நாடால் சூழப்பட்ட ஒரு நாட்டின்
ஒரு பகுதி) இருந்தன . இந்த என்கிளேவுகளில், உள்ள மக்களின் வாழ்க்கை
மற்றும் குடியுரிமை தொடர்பான பிரச்சனைகள் பெரிதாகி கொண்டே இருந்தன.இந்த நிலப்பகுதிகளில்
உள்ள குடிமக்கள் எந்தவிதமான உரிமைகளும் வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து வந்தனர்.
நில எல்லை ஒப்பந்தம்: வங்கதேசத்தின் சுதந்திரத்தைத் தொடர்ந்து,
நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கும் முயற்சியில், இந்தியாவும் வங்கதேசமும்
1974 நில எல்லை ஒப்பந்தத்தில் (“1974 Land Boundary Agreement”) கையெழுத்திட்டன. 1974 ஆம்
ஆண்டில், முதல் நில எல்லை ஒப்பந்தம் (LBA) உருவாக்கப்பட்டது ,இதன் மூலம் வங்கதேசத்திற்கு
111 என்கிளேவுகளை இந்தியா கொடுத்து, வங்கதேசத்திடம் இருந்து 51 என்கிளேவுகளை வாங்க
ஒப்பந்தம் இயற்றப்பட்டது. ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது, ஆனால் இந்திய அரசால் சட்டமாக
அங்கீகரிக்கப்படவில்லை, காரணம் இதற்கு அரசியலமைப்பு திருத்தம் தேவைப்பட்டது. இதனால்
LBAஇன் கீழ் பரிமாற்றம் வெற்றிகரமாக முடியவில்லை. 1974 நில எல்லை ஒப்பந்தம். 2011 இல்
கூடுதல் நெறிமுறைகளை சேர்த்து (“2011 நெறிமுறையுடன் கூடிய”, 1974 நில எல்லை ஒப்பந்தம்)திருத்தப்பட்டது.
100வது அரசியலமைப்பு
திருத்தம் (2015): இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நில எல்லை
ஒப்பந்தத்தின் (Land Boundary Agreement) மூலம் எல்லைப்பகுதிகளில் நிலப்பகுதிகள் பரிமாற்றம்
நடைமுறைப்படுத்தப்பட்டது. என்கிளேவுகளில் வாழ்ந்த மக்களுக்கு ஒழுங்கான குடியுரிமை வழங்கப்பட்டது.
பெருபாரி பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
இவ்வளவு
பெரிய விஷயம் சொல்லவருவது என்னவென்றால் சட்டப்பிரிவு இரண்டு மற்றும் மூன்றின் மூலம்
இந்திய அரசின் எல்லைக்குள் மாற்றங்களை கொண்டு வரலாம், ஆனால் மற்ற நாடுகளுடனான நில பிரச்சினைகளை
தீர்க்க அரசியலமைப்பு திருத்தம் தேவை என்பது தான்.
இங்கு
ஒரு கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்க வேண்டும். இந்த சட்டங்களை வைத்து 75ஆண்டு சுதந்திரம
இந்திய வரலாற்றில் இவ்வளவு மாற்றங்கள் தான் நிகழ்தனவா ?. அதுதான் இல்லை ஏகப்பட்ட மாற்றங்கள்
நடந்துள்ளன. சிறிது வரலாற்றோடு இந்த அத்தியாயத்தை முடிக்கலாம்.
இந்தியா
சுதந்திரம் அடையும் சமயத்தில் நாட்டில் 552 மன்னர் மாநிலங்கள் இருந்தன, அவற்றில்
549 மன்னர் மாநிலங்கள் இந்தியாவோடு இணைந்துவிட்டன. ஹைதராபாத், ஜுனார்க், மற்றும் ஜம்மு
காஷ்மீர் ஆகிய மூன்று மன்னர் மாநிலங்கள் மட்டும் தனித்து இருக்க முடிவுசெய்தன.
ஜுனாகட்: ஜுனாகட் மாநிலத்தின் நவாப், முஹம்மது
மஹாபத் கான் ஜி III, ஆகஸ்ட் 15, 1947 அன்று பாகிஸ்தானுடன் இணைந்தார். ஆனால், ஜுனாகட்
இந்தியாவுடன் நிலப்பரப்பில் தொடர்பில்லாததாலும், மேலும் அதன் மக்கள் பெரும்பாலும் இந்துக்கள்
என்பதாலும், இந்த இணைப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தியது. இந்திய அரசு இந்த இணைப்பை ஏற்கவில்லை.
மக்கள் எதிர்ப்பும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்பட்டதால், நவாப் மற்றும்
அவரது திவான் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர். பின்னர், இந்திய அரசு ஜுனாகட்டை தற்காலிகமாக
நிர்வகித்தது மற்றும் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பில்,
பெரும்பான்மையானோர் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.அதன் மூலம் இந்தியாவோடு
இணைக்கப்பட்டன.
ஹைதராபாத்: ஹைதராபாத் மாநிலத்தின் நிஜாம், ஒஸ்மான்
அலி கான், தனது மாநிலத்தை சுதந்திரமாக வைத்திருக்க விரும்பினார். ஆனால், மாநிலத்தின்
பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். நிஜாமின் ரஸாகார் படைகள் மாநிலத்தில் கலவரங்களை
ஏற்படுத்தின. இந்திய அரசு பல்வேறு முயற்சிகளுக்கு பிறகும், நிஜாம் இணைவதற்கு மறுத்ததால்,
1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 அன்று 'ஆபரேஷன் போலோ' என்ற திட்ட நடவடிக்கையைத் தொடங்கியது.
ஐந்து நாட்களில் நிஜாம் படைகள் தோற்கடிக்கப்பட்டு, நிஜாம் இந்தியாவுடன் இணைவதற்கான
ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
காஷ்மீர்: காஷ்மீர் மாநிலத்தின் மஹாராஜா ஹரி
சிங், தற்காலிகமாக சுதந்திரமாக இருக்க முடிவு செய்தார். இந்த பகுதி பெரும்பான்மையாக
இஸ்லாமியர்கள் இருந்தார். இந்த நேரத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்றவர்கள் மாநிலத்தில்
நுழைந்து கலகத்தை ஏற்படுத்தி படையெடுப்பு நடத்தினர், மஹாராஜா இந்தியாவின் உதவியை நாடினார்.
அதனால், அக்டோபர் 26, 1947 அன்று, அவர் இந்தியாவுடன் இணைவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
இதனால், இந்திய படைகள் காஷ்மீரில் நுழைந்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற படைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றனர் .
இதன் பிறகு இந்திய மாநிலங்கள்
நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. 1950 ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்பில், மாநிலங்கள்
மற்றும் மண்டலங்களுக்கு நான்கு பிரிவுகள் வழங்கப்பட்டன: பகுதி A, பகுதி B, பகுதி
C, மற்றும் பகுதி D. மொத்தம், இவை 29 ஆக இருந்தன.
1950 ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்பில், மாநிலங்கள் மற்றும் மண்டலங்களுக்கு நான்கு பிரிவுகள் வழங்கப்பட்டன: பகுதி A, பகுதி B, பகுதி C, மற்றும் பகுதி D. மொத்தம், இவை 29 ஆக இருந்தன.
பகுதி A மாநிலங்கள்: இவை, பிரிட்டிஷ் இந்தியாவின் முன்னாள் கவர்னர் மாகாணங்களில் 9 மாகாணங்களை கொண்டிருந்தன.
பகுதி B மாநிலங்கள்: இவை, சட்டமன்றங்கள் கொண்டிருந்த முன்னாள் 9 மன்னர் மாநிலங்கள் அரசுகளை உள்ளடக்கியது.
பகுதி C மாநிலங்கள்: இவை, பிரிட்டிஷ் இந்தியாவின் முன்னாள் தலைமை ஆணையர் மாகாணங்களும் மற்றும் சில மன்னர் மாநிலங்கள் அரசுகளும் சேர்ந்து மொத்தம் 10 மாநிலங்களாக அமைந்தன. இவை மத்திய நிர்வாகத்தின் கீழ் இருந்தன.
பகுதி D மண்டலம்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மட்டுமே இதன் கீழ் சேர்க்கப்பட்டன.
|
பகுதி A மாநிலங்கள்: |
பகுதி B மாநிலங்கள்: |
பகுதி C மாநிலங்கள்: |
பகுதி D மண்டலம்: |
|
அசாம் |
ஐதராபாத் |
அஜ்மீர் |
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் |
|
பீகார் |
ஜம்மு மற்றும் காஷ்மீர் |
பிலாஸ்பூர் |
|
|
மும்பை (பாம்பே ) |
மைசூர் |
கூர்க் |
|
|
மத்திய
பிரதேசம் |
ராஜஸ்தான் |
டெல்லி |
|
|
பெங்கால் (மேற்கு பெங்கால்) |
திருவாங்கூர்-கோச்சின் |
ஹிமாச்சல் பிரதேசம் |
|
|
மதராஸ் |
பஞ்சாப் (பட்டியாலா மற்றும் பிற
மாநிலங்கள்) |
மணிப்பூர் |
|
|
பஞ்சாப் |
சௌராஷ்டிரா |
திரிபுரா |
|
|
ஒரிசா |
மத்திய இந்தியா (மத்திய பாரத்) |
போபால் |
|
|
ஐக்கிய பிராந்தியம் (பிறகு உத்தரப் பிரதேசம்
என அழைக்கப்பட்டது |
விந்தியா பிரதேசம் |
கூச் பேகர் |
|
|
|
|
கட்ச் |
இதன் பிறகு மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்க வேண்டுமா என்பதை
குறித்து ஆராய குழுக்கள் அமைக்கபட்டது.
1. தார் குழு (1948)
நோக்கம்: மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிளவிக்கான சாத்தியத்தை ஆய்வு செய்ய, இந்திய அரசு முதல் முறையாக தார் குழுவை அமைத்தது.
கண்டறிதல்கள்: இந்த குழு மொழி அடிப்படையிலான மாநில அமைப்புக்கு எதிராக பரிந்துரைத்தது. மாநிலங்களை நிர்வாக வசதி, பொருளாதார நிலை மற்றும் பாதுகாப்பு ஆகியவைகளின் அடிப்படையில் அமைக்க வேண்டும் எனக் கூறியது.
தமிழகத்தில் தாக்கம்: இந்த அறிக்கை மொழி சார்ந்த பிராந்தியங்களில் பெரிதும் எதிர்ப்புக்கு உள்ளானது, குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் மொழி அடையாளத்திற்கான கோரிக்கைகளை கணிசமாக அதிகரித்தது.
2. ஜவஹர்லால், வல்லபாய், பட்டாபி (ஜேவிபி) குழு (1949)
உருவாக்கம்: தரா குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக, இந்திய தேசிய காங்கிரஸ் ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமையா ஆகியோர் தாங்களே அடங்கிய குழுவை அமைத்தனர் .
பரிந்துரைகள்: ஜேவிபி குழு மொழி அடிப்படையிலான மாநில அமைப்புக்கு எதிராகவும், தேசிய ஒற்றுமையை முன்னிலைப்படுத்தவும் பரிந்துரைத்தது.
தமிழகத்தில் எதிர்வினை: இந்த நிலைப்பாடு தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏமாற்றத்தைக் கொண்டுவந்தது.
3. பசல் அலி குழு (1953-1955)
உருவாக்கம்: மொழி அடிப்படையில் மாநில கோரிக்கைகள் அதிகரித்து, ஆந்திர மொழி மாநிலம் அமைக்கப் போராடி பொட்டி சீராமுலு உயிரிழந்த பிறகு, மாநில மறுசீரமைப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது.
பரிந்துரைகள்: மாநிலங்களை மொழி அடிப்படையிலும் கலாச்சார அடையாளத்திற்கும் ஏற்ப அமைக்க வேண்டும்.மெட்ராஸ் மாகாணத்தை பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டது, அதன் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசிய பகுதிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன.
தமிழகத்தில் தாக்கம்: மெட்ராஸ் மாகாணத்தின் தமிழ் பேசும் பகுதி மெட்ராஸ் மாநிலமாகவும், பின்னர் 1969-ல் தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யப்பட்டது .
·
Tamilnadu day history - vikatan
தமிழகத்தின் முக்கிய
மாற்றங்கள்
மெட்ராஸ் மாகாண மறுசீரமைப்பு: தெலுங்கு பேசும் பகுதிகள் 1953-ல்
ஆந்திரா மாநிலமாக ஆனது. மலையாளம் பேசும் பகுதிகள் கேரளாவுடன் இணைந்தன. கன்னடம் பேசும்
பகுதிகள் மைசூருடன் இணைந்தன.
குழுக்களின் பங்கு:
தார்
குழு மற்றும் ஜேவிபி குழுக்கள் ஆரம்பத்தில் மொழி அடிப்படையிலான மாநில அமைப்புக்கு எதிராக
இருந்தன. ஆனால் பசல் அலி குழு, மொழி அடையாளம் இந்திய ஒற்றுமைக்குள் முக்கியம் என்பதைக்
கணிப்பதாக இருந்தது.
இந்தியாவின் தற்போதைய
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (2024):
இந்தியாவில் மொத்தம்
28 மாநிலங்கள் உள்ளன. அவை
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம்,
அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட்,
கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து,
ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட்,
உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகும்.
மேலும், 8 யூனியன் பிரதேசங்களும்
உள்ளன. அவை
அந்தமான் நிக்கோபார் தீவுகள், சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தீவு, தேஹ்ரா, ஜம்மு மற்றும் காஷ்மீர், லக்ஷத்வீப், தேசிய தலைநகர் பிரதேசமான தேல்ஹி, மற்றும் புதுச்சேரி ஆகும்.
நாம் அனைவரும் இந்தியர்களா ? அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
குறிப்புகள்
தொடரும்......







Comments
Post a Comment