இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 4


இந்திய அரசியலமைப்புக்கு என்று தனி சிறப்பம்சம் உள்ளது. பல நாடுகளின் அரசியலமைப்புகளை தழுவி எழுதப்பட்டதே இந்திய அரசியலமைப்பு, ஏதோ நகல் எடுத்தது போல் அல்லாமல் இந்த இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தி போகின்ற வழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு பல சட்ட திருத்தங்களை சந்தித்தாலும் இன்றளவும், இந்த மாற்றங்கள் அடைந்த சமூகத்திற்கு ஏற்ப இருக்கிறது. இதற்கு காரணம் இந்திய அரசியலமைப்பின் "அடிப்படை கட்டமைப்பு". இந்த அடிப்படை கட்டமைப்பு மாறாமல் இருப்பதால் தான் இன்றளவும் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அடிப்படை கட்டமைப்பு என்பது என்வென்று இனி வரும் காலங்களில் பார்ப்போம், இந்த தொடர் முடியும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு அது  தானாகவே புரிந்துவிடும்.

நிறைவான நிறைகள்

என்னை பொறுத்தவரை இந்த அண்டத்தில் புனிதம் என்ற ஒன்றோ அல்லது முழுவதுமாக நல்லவை என்ற ஒன்றோ கிடையாது. எல்லா உயிர்களிடத்தும் சரி, எல்லா பொருளிலும் சரி நல்லது கெட்டது, பயனுள்ளது பயனற்றது என்று குணங்கள் உண்டு, இவற்றின் வீகிதம் தான் அந்த பொருள் நல்லவையா கெட்டவையா என்று தீர்மானிக்க உதவுகின்றன. அதே போல் தான் நம் அரசியலமைப்பும் நல்லவைகள் நானூறு இருந்தாலும் குறைகள் கொஞ்சமேனும் இருக்கத்தான் செய்கின்றன. நல்லவைகளை முதலில் பார்ப்போம்.

மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு 

நம் அரசியலமைப்பு எழுதப்பட்ட ஒன்று, ஆங்கிலேய அரசியலமைப்பு போல வெறும் காலத்தால் உருவான நடைமுறை அல்ல. மற்ற எந்த நாடுகளிடமும் எழுதப்பட்ட அரசியலமைப்பு இல்லையா ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது..! அமெரிக்காவின் அரசியலமைப்பும் எழுதப்பட்ட ஒன்று தான். ஆனால் நம் அரசியலமைப்பு போல மிக தெளிவான விரிவான விளக்கமும் மிக நீண்ட நெடிய சட்டங்களும் அங்கு இல்லை. இந்திய அரசியலமைப்பு அதன் உருவாக்கத்தின் போது முகப்புரை, 395 சட்டங்கள்(22 பகுதிகள்), 8 அட்டவணைகள் இருந்தன. தற்போது 2024ல் முகப்புரை, 448 சட்டங்கள்(25 பகுதிகள்) 12 அட்டவணைகள் மற்றும் 104  சட்டத் திருத்தங்கள்  உள்ளன.

    இந்தியாவின் மிகப்பெரிய நிலப்பரப்பு மற்றும் பன்முகத்தன்மை, வரலாற்று காரணங்கள், மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கு ஒரே ஒரு அரசியலமைப்பு, அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் சட்ட நிபுணர்களாக இருந்தது. இந்திய அரசியலமைப்பு, ஆட்சி செய்வதற்கான அடிப்படை கொள்கைகளை மட்டும் கொண்டு இல்லாமல் ஆட்சி நிர்வாகத்திற்கு தேவையான விதிமுறைகளையும் உள்ளடக்கி உள்ளது. இவைகளால் தான்  இந்திய அரசியலமைப்பு மிக பெரிய அரசியலமைப்பாக உருவானது.

பல்வேறு ஆதாரங்களால் உருவான அரசியலமைப்பு 

இந்திய அரசியலமைப்பு பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பில் உள்ள சிறப்பான விஷயங்களை எடுத்து அதைத் தழுவி உருவாக்கினார்கள். முந்தைய பதிவுகளில் சொன்னது போல இந்திய அரசு சட்டம் 1935ன் பெரும் பகுதியை இந்திய அரசியலமைப்பாக மாற்றினார்கள்.

  • அரசியலமைப்பின் கட்டமைப்புகள் - ஆளுநர் பதவி, கூட்டாட்சி முறை, நீதித்துறை, பணியாளர் தேர்வாணையம், அவசர சட்டம் மற்றும் நிர்வாக விதிகள் ஆகியவை இந்திய அரசு சட்டம் 1935ல் இருந்து பெறப்பட்டன.
  • தத்துவ பகுதியான அடிப்படை உரிமைகள், சுதந்திரமான நீதித்துறை, சட்ட ஆய்வுகுடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரை  பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள் ஆகிய அனைத்தும் அமெரிக்க அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டன.
  • மற்றொரு தத்துவ பகுதியான அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள், மாநிலங்களவையில்  உறுப்பினர்களை நியமனம் செய்யும் நடைமுறை, குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவை அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டன.
  • அரசியல் பகுதிகளான நாடாளுமன்றம் மூலம் ஆட்சி செய்வது, சட்டத்தின் ஆட்சி, சட்டம் இயற்றும் வழிமுறைகள், ஒற்றை குடியுரிமை, அமைச்சரவை முறை, நீதிபேராணைகள்நாடாளுமன்ற சிறப்பு உரிமைகள், இரு அவை முறை ஆகியவை ஆங்கிலேய அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டன.
  • வலுவான ஒன்றியத்துடன் மாநிலங்களின் கூட்டாட்சி முறை, அதிகார பகிர்வுக்கு பின் எஞ்சிய அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்கும் நடைமுறை, மத்திய அரசால் ஆளுநர்களை மாநிலங்களுக்கு நியமிக்கும் நடைமுறைகுடியரசு தலைவரோ அல்லது ஆளுநரோ நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனை கேட்கும் நடைமுறை ஆகியவை கனடா நாட்டு அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டன.
  • பொது பட்டியல், நாடு முழுவதும் ஒருவர் வர்த்தகம் செய்வதற்கான சுதந்திரம், நாடாளுமன்ற கூட்டமர்வு முறை ஆகியவை ஆஸ்திரேலிய அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டன.
  • அவசர நிலையில் அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல் ஜெர்மனி அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டன.
  • அடிப்படை கடமைகள், சமூகநீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி ஆகியவை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து பெறப்பட்டன.
  • முகப்புரையில் உள்ள குடியரசாட்சி, தன்னுரிமை, சம உரிமை, சகோதரத்துவம் ஆகியவை பிரெஞ்சு அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டன. 
  • அரசியலமைப்பு சட்டத்திருத்த வழிமுறைகள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வழிமுறை ஆகியவை தென்னாப்பிரிக்கா அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டன.
  • சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறை என்பது சட்டத்தை பின்பற்றுதல், இந்த பகுதியை ஜப்பான் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டன.

எளிமையாக மாற்றம் அடையும் தன்மையும் எளிதாக மாற்றம் அடையா  தன்மையும்

அரசியலமைப்பு இரண்டு வகையானது எளிதாக திருத்த முடியும் அரசியலமைப்பு(நெகிழும் தன்மை )மற்றும் எளிதில் திருத்த முடியாத இறுக்கமான அரசியலமைப்பு(நெகிழா தன்மை). அமெரிக்க அரசியலமைப்பை எளிதாக திருத்த முடியாது, அதில் திருத்தம் கொண்டு வர சிறப்பு நடைமுறைகள் மற்றும் சிறப்பு பெரும்பான்மை தேவை. அதேவேளை ஆங்கிலேய அரசியலமைப்பை திருத்த சிறப்பு நடைமுறைகளோ சிறப்பு பெரும்பான்மையோ தேவையில்லை, சாதாரணமான சட்டங்களை திருத்தும் முறையிலேயே அரசியலமைப்பையும் திருத்தலாம். 

இந்திய அரசியலமைப்பு இந்த இரண்டு தன்மைகளையும் சேர்த்து தன்னகத்தே கொண்டுள்ளது. சில இடங்களில் சாதரணமாக திருத்தம் செய்யும் முறையும் சில விஷயங்களில் சிறப்பு நடைமுறைகளும் உள்ளன. இந்த திருத்த நடைமுறை இந்த தொடரின் வருங்காலங்களில் பார்ப்போம்.

கூட்டாட்சி முறையும் ஒன்றிய அரசும்

இந்திய அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சி கூறுகளான இரட்டை அரசாங்கம் (மத்திய மற்றும் மாநில), அதிகார பகிர்வு, எழுதப்பட்ட அரசியலமைப்பு, அரசியலமைப்பு எல்லாவற்றையும் விட மேலானது என்ற கருத்துகோள், எளிதில் அரசியலமைப்பை திருத்த  முடியாத முறை, சுதந்திரமான நீதிமுறை மற்றும் ஈரவை முறை போன்ற விஷயங்களும்.

ஒன்றிய அரசாங்க கூறுகளான வலிமையான மத்திய அரசாங்கம், ஒற்றை அரசியலமைப்பு, ஒற்றை குடியுரிமை, எளிதாக திருத்தும் நடைமுறை, ஒருங்கிணைந்த நீதித்துறை, மத்திய அரசால் ஆளுநர் நியமிக்கப்படும் நடைமுறை, ஒன்றிய குடிமைப் பணிகள், அவசரகால நடைமுறை இன்னும் பல.

இன்னும் சொல்லப்போனால் "கூட்டாட்சி" என்ற சொல் அரசியலமைப்பின் எந்த இடத்திலும் இல்லை. அரசியலமைப்பின் முதல் உறுப்பில் "இந்தியா என்னும் பாரதம் மாநிலங்களை கொண்டதோர் ஒன்றியமாகும்" என்று கூறப்பட்டுள்ளது.  முடிவாக கூறவேண்டும் என்றால் இந்திய அரசியலமைப்பு என்பது கூட்டாட்சி அமைப்பு கொண்ட ஒரு ஒன்றிய அரசாங்கம் ஆகும்.

நாடாளுமன்ற ஆட்சி முறை 

இந்திய அரசியலமைப்பு ஆங்கிலேய அரசாங்கம் போல நாடாளுமன்ற ஆட்சி முறையையே தேர்ந்தெடுத்தது, காரணம் நாம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்ததால் அந்த பழக்கம் தொடர்ந்தது மற்றொன்று இந்த நாடாளுமன்ற ஆட்சி முறையில் எல்லா பக்கங்களிலும் சமமான அதிகார பகிர்வு இருக்கும், எந்த ஒரு அமைப்போ அல்லது துறையோ மேலாதிக்கம் நிறைந்ததாக இருக்க முடியாது.

உதாரணமாக சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உள்ளது, இயற்றிய சட்டத்தை அமல்படுத்தவது தான் நிர்வாக அமைப்பான ஆளும் அமைச்சர்களின் வேலை, அமைச்சர்கள் தன் விருப்பம் போல் செயல்பட முடியாது, அவர்கள் நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்டவர்கள், நாடாளுமன்றம் தவறான அல்லது அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணான சட்டம் இயற்றினால், அதை ஆய்வு செய்யவும், அந்த சட்டத்தை நிராகரிக்கும் உரிமையும் நீதிதுறையிடம் உள்ளது. நீதிதுறையோ நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களின் அடிப்படையில் இயங்கும் அமைப்பு. இப்படி அதிகாரம் ஒரு தொடர் சங்கிலி போல பகிரப்பட்டு இருப்பதால் எந்த ஒரு அமைப்பும் மக்கள் மீது மேலாதிக்கம் செலுத்த முடியாது. சுருக்கமாக கூறினால் அரசியலமைப்பே எல்லாவற்றையும் விட மேலானது. 

இந்த நாடாளுமன்ற ஆட்சி முறையை "Westminster model" என்றும் குறிப்பிடுவதுண்டு. ஆங்கிலேய அரசாங்கத்தின் நாடாளுமன்ற இறையாண்மை கொண்ட சுதந்திர அமைப்பு ஆனால் இந்திய நாடாளுமன்றம் நீதிதுறைக்கு கட்டுப்பட்டது. இந்தியாவின் குடியரசு தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார் மாறாக ஆங்கிலேய அரசாங்கத்தின் தலைவர் பதவியில் அரச குடும்பத்தின் வாரிசுகள் மட்டுமே இருக்க முடியும். இந்த நாடாளுமன்ற ஆட்சி முறையில் முதல் மந்திரியான பிரதமரின் பங்கு மிக முக்கியமானது.

 

ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதிதுறை

இந்திய அரசியலமைப்பு ஒருங்கிணைந்த மற்றும் சுதந்திரமான நீதிதுறை என்ற அமைப்பை நிறுவியுள்ளது. நீதிமன்றங்களின் அதிகார உச்சியில் இருப்பது உச்சநீதிமன்றம் அதற்கு கீழ் அதிகாரத்தில் இருப்பது மாநில உயர்நீதிமன்றங்கள், அதற்கும் கீழ் இருப்பது கீழமை நீதிமன்றங்களான மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் இதர நீதிமன்றங்கள். இந்த ஒருங்கிணைந்த அமைப்பால் தான் நமக்கு சில நேரங்களில் சரியான நீதி கிடைக்கிறது. உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பு மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராகவும்  விளங்குகிறது. நீதித்துறை, ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிவிடக் கூடாது என்பதற்காக சில சிறப்பம்சங்களை இந்திய அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவை நீதிபதிகளுக்கு நிலையான பதவிக்காலம், பணி பாதுகாப்பு, ஊதியம் மற்றும் சலுகைகள் எல்லாம் இந்திய ஒருங்கிணைந்த நிதியில் இருந்து கொடுக்கப்படுகின்றன, ஓய்வுபெற்ற பிறகு வழக்கறிஞர் தொழில் செய்யக்கூடாது, நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்து வைத்திருந்தல் போன்றவைகளாகும்.

 

அடிப்படை உரிமைகள், அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள், அடிப்படை கடமைகள்

அடிப்படை உரிமைகள்:

இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது பகுதி மொத்தம் ஆறு அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. சம உரிமை, சுதந்திரமாக இருப்பதற்கான உரிமை,உழைப்பு சுரண்டலுக்கு எதிரான உரிமை,சமயச் சுதந்திர உரிமை, கலாச்சாரம் மற்றும் கல்விகான உரிமை, அரசியலமைப்பு மூலம் தீர்வு காண்பதற்கான உரிமை. இந்த அடிப்படை உரிமைகள் தான் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையில் இருந்தும் ஆட்சியாளர்கள் இயற்றிய தவறான சட்டங்களிலும் மக்களை பாதுகாக்கிறது. இந்த அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் பாதிக்கப்பட்ட நபர் உச்சநீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடுக்கலாம். உச்சநீதிமன்றம் ஆட்கொணர்வு(Habeas corpus),செயலுறுத்து(mandamus), தடையுறுத்து(prohibition), தகுதி வினவு(quo warranto), நெறிமுறைகேட்பு(certiorari) போன்ற நீதிபேராணையின்(writs) மூலம் அரசு நடவடிக்கை எடுக்க கட்டளையிடும். அதே நேரத்தில் இந்த அடிப்படை உரிமைகள் என்றும் நிலையானவை அல்ல நாடாளுமன்றம் நினைத்தால் இவற்றை மாற்றவோ நீக்கவோ முடியும். தேசிய அவசரநிலை போன்ற நேரங்களில் இந்த அடிப்படை உரிமைகளில் இரண்டை தவிர மற்ற அனைத்தும் கட்டுபடுத்தப்படும் அல்லது இடைநிறுத்தப்படும்.(அந்த இரண்டு என்ன என்பது குறித்து எதிர்ப்பார்த்து காத்திருங்கள் பிறகு சொல்கிறேன்....

அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் : 

அண்ணல் அம்பேத்கர் இந்த நெறிப்படுத்தும் கோட்பாடுகளை இந்திய அரசியலமைப்பின் "புதுமையான அம்சம்" என்று கூறினார். அரசியலமைப்பின் பகுதி 4ல் பட்டியிலப்பட்டிருக்கும் இந்த கோட்பாடுகள் மூன்று வகையான தத்துவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை காந்திய கொள்கைகள், பொதுவுடமைக் கொள்கைகள், மற்றும் சுதந்திர மற்றும் அறிவுசார் கொள்கைகள். இந்த கோட்பாடுகள் "மக்கள் நலன் பேணும் நாடு" என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. இங்கு மறுபடியும் ஒரு சிறு பிரச்சினை, இந்த கோட்பாடுகள் அரசு நிர்வாகத்திற்கான வழிகாட்டி தான், இந்த கோட்பாடுகள் மீறப்படுகிறது என்றால் அவற்றை காரணமாக காட்டி வழக்கு தொடுக்க முடியாது. ஒரு சட்டம் இயற்றும் போது அரசாங்கம் இந்த கோட்பாடுகளை நினைவில் வைத்து அறம் சார்ந்து சட்டம் இயற்ற வேண்டும். இங்கு ஒரு உதாரணம் கூறலாம் என்று நினைக்கிறேன்....

உறுப்பு 39ன்(article 39)படி எல்லா வளங்களையும் எல்லோருக்கும் சமமாக பயன்படும் படி பயன்படுத்த வேண்டும், அரசானது தனி நபர்களிடம் அதிகப்படியான செல்வம் குவிந்து விடாமல் தடுக்க வேண்டும்.ஆனால் இன்றைய நிலையோ வேறு மாதிரி உள்ளது, இந்தியாவின் 1% சதவீத பணக்காரர்கள் இந்தியாவின் 40% மக்களின் செல்வத்தை சேர்த்து வைத்து இருக்கிறார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வு மிக வேகமாக அதிகரித்து கொண்டு வருகிறது.


    இதை எந்த அரசும் சரி செய்ய முன் வரவில்லை. பணகாரர்களுக்கு வரி சலுகைகள் தந்து விட்டு, அன்றாடம் உழைத்து தான் வாழ வேண்டும் என்ற நிலையில் இருக்கும் மக்கள் பயன்படுத்தும் அத்தனை பொருட்கள் மீதும் வரி விதிக்கப்படுகிறது. இதற்காக நம்மால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் முடியாது, இதுதான்  இந்த கோட்பாடுகளின் நிலை...!

அடிப்படை கடமைகள் : 

இந்த நாடு நமக்கு அடிப்படை உரிமைகளை தந்துள்ளது அதே நேரத்தில் சில அடிப்படை கடமைகளையும் நாம் இந்த நாட்டுக்காக செய்ய வேண்டும். 42ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அடிப்படை கடமைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன. இந்த அடிப்படை கடமைகள் பகுதி 4Aல் உள்ளது. மொத்தம் 11 அடிப்படை கடமைகள் உள்ளது அரசியலமைப்பு, தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவற்றை மதிக்க வேண்டும், சுதந்திர போராட்டத்தின் கொள்கைகள் மற்றும் தத்துவங்களை போற்றி பின்பற்ற வேண்டும், இப்படி இன்னும் சில உள்ளது, அதை அடுத்து வரும் அத்தியாயங்களில் முழுமையாக பார்க்கலாம். இந்த அடிப்படை கடமைகளும் நெறிப்படுத்தும் கோட்பாடுகள் போல ஒருவர் மீறியதற்காக   நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இயலாது. உதாரணமாக இந்திய குடிமக்கள் ஒவ்வொரும் இயற்கையை பாதுகாக்க வேண்டும், அவற்றை அழிக்க கூடாது என்று அடிப்படை கடமைகள் கூறுகிறது, மாறாக நம் எல்லோரும் தான் இந்த இயற்கையை சேர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக நம் மீது வழக்கு தொடுக்க முடியாது.

இன்னும் சில சிறப்பம்சங்கள் உள்ளன, அவற்றை அடுத்த அத்தியாயத்தில் விரிவாக பார்க்கலாம்... உங்கள் கருத்துக்களை "comment"ல் பதிவிடுங்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்.

 

குறிப்புகள் தொடரும்....

 

Comments

Popular posts from this blog

சரியான நேரம்

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 9

காகித அன்பு