இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் -6
6
நவம்பர்
27 2024, இந்திய
உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசியலமைப்பில் உள்ள "பொதுவுடைமை(socialism)"
மற்றும் "மதச்சார்பின்மை" ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டிய தேவையில்லை
என்பதை உறுதி செய்தது.

"PREAMBLE"- இந்திய அரசியலமைப்பின் முகப்புரை,
இதை "இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை" என்று N A Palkhivala குறிப்பிடுகிறார். இந்திய
அரசியலமைப்பின் முகப்புரை, நேரு அவர்கள் கொண்டு வந்த குறிக்கோள் தீர்மானத்தை அடிப்படையாக
கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த முகப்புரையில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின்னால்
மிக பெரிய அர்த்தங்கள் உள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இறையாண்மை
- Sovereign
இறையாண்மை என்ற வார்த்தையின் பொருள் "இந்திய நாடானது எந்த ஒரு நாட்டின் அதிகாரத்திற்கு கீழோ அல்லது எந்த ஒரு நாட்டையும் தன் அதிகாரத்தின் கீழோ கொண்டிருக்கவில்லை" என்பது தான். இந்திய நாடு சுதந்திரமான நாடு ,அதன் உள்நாட்டு விஷயங்களையும் வெளியுறவுகளையும் எவ்வித அழுத்தமுமின்றி சுயமாக முடிவெடுக்க முடியும். அதே சமயம் இந்தியா தன்னை காமன்வெல்த் குழுவில் உறுப்பினராக சேர்த்துக் கொண்டது, ஐக்கிய நாடுகள் சபையிலும் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டது. இந்த குழு மற்றும் கூட்டங்களில் உறுப்பினராக இருப்பது எந்த வகையிலும் இந்தியாவின் இறையாண்மையை பாதிக்காது. அதேபோல இந்தியா இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அதனால் வேறு நாட்டின் எல்லையை கைப்பற்றவும் முடியும், தன்னிடம் இருக்கும் நிலப்பரப்பை வேறு நாட்டிற்கு கொடுக்கவும் முடியும்.
பொதுவுடைமை-Socialism
இந்த
வார்த்தை 1976 ஆண்டு கொண்டு வரப்பட்ட 42 ஆவது அரசியலமைப்பு திருத்தில்
தான் சேர்க்கப்பட்டது. நம் அரசியலமைப்பின் அரசு கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில்
பொதுவுடைமை கொள்கைகளின் கூறுகளை பார்க்கலாம். "இந்திய பொதுவுடைமை" என்பது
உண்மையான பொதுவுடைமை சிந்தாந்தில் இருந்து கொஞ்சம் மாறுபட்டது. இந்திய பொதுவுடைமையை
"மக்களாட்சி பொதுவுடைமை" என்றும் அழைப்பார்கள். சோவியத் ஒன்றியம் போலவோ அல்லது
வடகொரியா போலவோ ஒற்றை கட்சி ஆட்சி இல்லாமல் இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை, மக்கள்தான்
தங்களுக்கான அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள். இந்தியாவை பொறுத்தமட்டில் பொதுவுடைமை
என்பது "எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும்". சமூகநீதி,
சமமாக நடத்துதல் போன்ற பல கோட்பாடுகளுக்கு அடித்தளமாக இருப்பது பொதுவுடைமை சிந்தாந்தம்
தான். அதை நோக்கி தான் எல்லா அரசுகளும் செயல்பட வேண்டும். வறுமை ஒழிப்பு, செல்வத்தை
பரவலாக்குதல் இவை தான் மக்களாட்சி பொதுவுடைமையின் அடிப்படை நோக்கமாகும்.
பொளுதாரத்தை
பொறுத்தமட்டில் 1990களில் முன்புவரை முக்கியமான துறைகளில் அரசு மட்டுமே ஏகபோகம் செலுத்தி
வந்தது. அது ஒரு வகையில் மக்களுக்கு நல்லது செய்தது என்றாலும் மறுப்புறம் லஞ்சமும்
ஊழலும் பெருக ஆரம்பித்தது, இந்தியாவின் நிதிநிலைமை சீர்குலைந்தது. அதனால் 1990களுக்கு
இந்தியாவில் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உலகமயம், தனியார்மயம்,
தாராளமயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2024ல் எல்லாத் துறைகளிலும் தனியார்மயம் வந்துவிட்டன.
இந்த புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் "மக்கள் நலன் சார்ந்த அரசு" என்ற
கொள்கை மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் சந்தையை விட்டு விலகி
செல்ல செல்ல"Laissez-faire",Oligopoly என்னும் ஒரு சில
பெரிய முதலாளிகளின் கையில் சந்தை செல்லும், அவர்கள் சொல்வது தான் விலையாக நிர்ணயிக்கப்படும்.
இன்று நிகழ்த்தும் கொண்டிருக்கும் ஒரு உதாரணம் நம் அலைபேசிக்கான கட்டணங்களை வெறும்
இரண்டு நிறுவனங்கள் மட்டுமே முடிவு செய்துகொண்டு இருக்கிறது. இதை தடுக்க அரசாங்கம்
எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதச்சார்பின்மை
மதசார்பின்மை
பற்றி போன அத்தியாயத்தில் குறிப்பிட்டு இருந்தேன். அவற்றையே மீண்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
"மதசார்பற்ற" என்று சொல் 1976ல் கொண்டுவரப்பட்ட 42ஆவது சட்டத்திருத்த மூலம்
முகப்புரையில் சேர்க்கப்பட்டது. அரசியலமைப்பில் உள்ள பல உறுப்புகளும் சட்டங்களும் மறைமுகமாக
இந்திய மதசார்பற்ற நாடு என்றே உணர்த்துகின்றன. உதாரணமாக அடிப்படை உரிமைகள் உறுப்பு
15 - "எந்த ஒரு இந்தியருக்கும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது"
என்று கூறுகிறது. உறுப்புகள் 16, 25, 26, 27, 28, 29 இன்னும் பல.
மேற்கத்திய
நாடுகளின் "மதச்சார்பின்மைக்கும்" நம் நாட்டின் "மதச்சார்பின்மைக்கும்"
கருத்து வேறுபாடுகள் உள்ளன, மேற்கத்திய நாட்டில் மதமானது ஒரு போதும் அரசு நிர்வாகத்தில்
தலையிடாது, அரசின் எந்த ஒரு விஷயத்திலும் மத அடையாளங்கள் இருக்காது. இந்தியாவில் உள்ள
மதச்சார்பின்மை என்பது எல்லா மதத்தையும் சரிசமமாக பார்ப்பது அவற்றிக்கு மரியாதை அளிப்பது.
இந்த கருத்து வேறுபாட்டிற்கு காரணம் மேற்கத்திய நாடுகளில் ஒரு நாட்டிற்கு மொத்தமாகவே
ஒரு மதம் தான் இருக்கும், ஆனால் இந்தியாவில் பல மதங்கள் உள்ளன, அவை அனைத்திற்கும் சமமான
மரியாதை அளிப்பது இந்திய அரசின் பொறுப்பாகும்."
மக்களாட்சி
இந்திய
அரசியலின் அடிப்படையாக இருப்பது "மக்களாட்சி" தான். மக்களாட்சி இரண்டு வகைப்படும்
"நேரடியான மக்களாட்சி" மற்றும் "மறைமுகமான மக்களாட்சி". நேரடி
மக்களாட்சி என்பது சிறிய நாடுகளான சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும்.
அரசின் முடிவுகளுக்கு மக்கள் நேரடியாக தங்களின் வாக்கை செலுத்தி ஆதரவு மற்றும் எதிர்ப்பை
தெரிவிப்பார்கள். இது கிட்டத்தட்ட கிராம ஊராட்சிகளில் நடக்கும் கூட்டங்களில் முடிவெடுப்பது
போன்றது. மறைமுகமான மக்களாட்சியில் மக்கள் தங்களுக்கான ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுத்தது
நாடாளுமன்றத்திற்கு அனுப்புவார்கள், அந்த பிரதிநிதிகள் மக்களின் தேவைகளை நாடாளுமன்றம்
மூலம் நிறைவேற்றுவார்கள். இந்த முறையை "நாடாளுமன்ற மக்களாட்சி" என்றும் கூறுவார்கள்.
இந்திய
மக்களாட்சி நாடாளுமன்ற மக்களாட்சி தான். நாடாளுமன்ற மக்களாட்சியில் அரசு நிர்வாகம்
நாடாளுமன்றத்திற்கு கட்டுப்பட்டது. எந்த ஒரு பெரிய முடிவையும் தனிச்சேயாக அரசால் எடுக்க
முடியாது. அவை நாடாளுமன்ற விவாதம் மற்றும் ஒப்புதலுக்கு பிறகே செயலுக்கு வரும். முகப்புரையில்
மக்களாட்சி என்ற சொல் மிக விரிவான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை அண்ணல் அம்பேத்கரின்
உரையின் மூலம் அறியலாம்:
"நாம் செய்ய வேண்டிய விஷயம்,
வெறும் அரசியல் ஜனநாயகத்தில் மட்டும் திருப்தியடைவது அல்ல. நமது அரசியல் ஜனநாயகத்தை
சமூக ஜனநாயகமாக மாற்ற வேண்டும். சமூகத்தில் ஜனநாயகம் இல்லை என்றால் அரசியலில்
ஜனநாயகம் நீடிக்காது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன? இது சுதந்திரம், சமத்துவம் மற்றும்
சகோதரத்துவத்தை வாழ்க்கையின் கொள்கைகளாக அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறையை குறிக்கிறது.
சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் தனித்தனியாகக் கருதக்கூடாது.
இதில் ஒரு கொள்கையை தூக்கி பிடித்துவிட்டு மற்றவற்றை கைவிடுவது என்பது ஜனநாயகத்தின்
நோக்கத்தையே தோற்கடிப்பது போலாகும். சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது,
சமத்துவத்தை சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது, சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்
சகோதரத்துவத்திலிருந்து பிரித்துவிட முடியாது. சமத்துவம் இல்லாத சுதந்திரம் பலர்
மீது சிலர் மேலாதிக்கத்தை செலுத்தும் நிலையை உருவாக்கும். சுதந்திரம் இல்லாத சமத்துவம்
தனிமனித முயற்சி மற்றும் விருப்பங்களை அழித்துவிடும். சகோதரத்துவம் இல்லாமல், சுதந்திர
சமத்துவம் என்பது இயற்கையான விஷயமாக மாற முடியாது. அவற்றைச் செயல்படுத்துவதற்கு ஒரு
கான்ஸ்டபிள் தேவைப்படுவார்..... (25 நவம்பர் 1949)"
குடியரசு
மக்களாட்சியில்
அரசின் தலைமை இரண்டு விதமாக இருக்கும். ஒன்று முடியரசு மற்றும் குடியரசு.
முடியரசில் நாட்டின் தலைவராக ஒரே ஒரு அரசரின் குடும்பம் தான் இருக்கும், அவர்களின்
வாரிசுகள் தான் அந்த பதவிக்கு வர முடியும். உதாரணமாக பிரிட்டன் அரசுகள். இதே குடியரசில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் தான் நாட்டின் தலைவராக இருக்க முடியும். இதற்கு
சிறந்த உதாரணம் அமெரிக்கா. இந்திய நாட்டின் தலைவரான குடியரசு தலைவர் மக்கள் பிரதிநிதிகளால்
தேர்ந்தெடுக்கப்படுவார். குடியரசு என்பது இங்கு இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று
நாட்டின் இறையாண்மையும் அதன் ஆட்சியாளர்களும் மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள். மற்றொன்று
இந்நாட்டில் எல்லோரும் சமமானவர்கள், யாரு வேண்டுமென்றாலும் இந்நாட்டின் தலைவராக முடியும்,
அதேபோல் இந்நாட்டின் அத்தனை அரசு அலுவலகங்களும் அனைவருக்குமானது என்பதை குறிக்கிறது.
நீதி
நீதி என்கின்ற இந்த கருத்துகள் மற்றும் சிந்தனைகள் அனைத்தும் இரஷ்ய புரட்சியின் விளைவாக உருவானது. இந்திய அரசியலமைப்பில் நீதி என்பது மூன்று பரிமாணங்களில் பார்க்கப்படுகிறது. அவை சமூகநீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி. சமூக நீதி என்பது அனைவரும் சமம், யாரையும் எதன் அடிப்படையிலும் ஏற்றத்தாழ்வு பார்க்ககூடாது என்பது தான். இங்கு உங்களுக்கு ஒரு சிறு குழப்பம் ஏற்படலாம், சமூக நீதிக்கு இதுதான் அர்த்தம் என்றால், பின் ஏன் இந்திய அரசியலமைப்பு இட ஒதுக்கீடுகள் தருகிறது...!
இந்த
படம் தான் சிறந்த உதாரணம். சமமாக நடத்துவது என்பது அனைவருக்கும் ஒரே உயரத்தில் நாற்காலிகளை
கொடுப்பது, இதனால் எல்லோரும் சமமாக நடத்தப்பட்டாலும், எல்லோரும் பயன்பெற வேண்டும் என்ற
உண்மையான நோக்கம் நிறைவேறுவதில்லை, இதே ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ப நாற்காலிகளை
கொடுக்கும் போது எல்லோரும் பயன்பெறும் வாய்ப்பை உருவாக்குகிறோம். பிற்படுத்தப்பட்ட
மற்றும் பழங்குடியின மக்களுக்கும், பெண்களுக்கும் இட ஒதுக்கீடுகள் வழங்குவதற்கான காரணம்
இது தான். பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு சமூக ஏற்றத்தாழ்வில் சிக்குண்டு ஒடுக்கப்பட்டு
வாழும் மக்களை சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது தான் இட ஒதுக்கீட்டின் நோக்கம். இந்த
ஆண்டு வைக்கம் போராட்டத்தின் நூறாவது ஆண்டு, வைக்கம் போராட்டம் இந்திய வரலாற்றில் தீண்டாமை
மற்றும் சாதிய அடக்குமுறைக்கு எதிரான முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பொருளாதார
நீதி: பொருளாதார
நீதி என்பது செல்வத்தின் அடிப்படையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை சரி செய்வதாகும். ஆண்
பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இருவருக்கும் செய்யும் வேலைக்கு ஏற்ற சமமான ஊதியம். செல்வமானது
ஒரு சிலரின் கைகளுக்கு சென்று குவிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், செல்வத்தை
பரவலாக்கம் செய்ய வேண்டும்.
அரசியல்
நீதி: அரசியல் நீதி
என்பது எல்லா விதமான மக்களுக்கும் சமமான அரசியல் அதிகாரம் கிடைக்க செய்வதாகும். அனைத்து
சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் ஏற்படுத்துவதாகும்.
விடுதலை
அல்லது சுதந்திரம்
சுதந்திரம்,
சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்னும் இந்த கருத்து பிரெஞ்சு புரட்சியின் விளைவாக
உருவானது. இந்திய அரசியலமைப்பில் சுதந்திரம் என்பது சிந்திக்கும் சுதந்திரம் , பேசுவதற்கான
சுதந்திரம், எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுவதற்கான சுதந்திரம், வழிபாடு செய்வதற்கான
சுதந்திரம் இப்படி பல பரிமாணங்களில் உள்ளது. ஒரு மனிதனுக்கு சுதந்திரம் என்பது இன்றியமையாத
ஒன்று, யாருக்கும் யாரும் அடிமையில்லை என்ற கருத்தின் வெளிபாடு தான் இந்த சுதந்திரம்.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த சுதந்திரம் "கட்டுபாட்டுடன் கூடிய
சுதந்திரம்". அப்படி என்றால், எனக்கு பேசுவதற்கான சுதந்திரம் இருக்கிறது என்று
பிறரை பற்றி அவதூறாகவோ அல்லது இழிவாகவோ பேசக்கூடாது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்
சுதந்திரம் என்பது பிறரை மனதளவில் கூட காயப்படுத்தாமல் நமக்கு பிடித்தவற்றை செய்வது
தான்.
சமத்துவம்
சமத்துவம்
என்பது எல்லோரையும் சமமாக நடத்துவது, சமமான வாய்ப்புகள் வழங்குவது, எந்த ஒரு நிலையிலும்
ஒருவரை ஏற்றத்தாழ்வாக நடத்தக்கூடாது. மறுபடியும் சமத்துவம் மூன்று பரிமாணங்களில் உள்ளது.
அவை மக்களிடையே சமத்துவம், அரசியல் சமத்துவம் மற்றும் பொருளாதார சமத்துவம். மக்களிடையே
சமத்துவம் என்பது அடிப்படை உரிமைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் சமத்துவம் உறுப்பு
325 மற்றும் 326ல் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார சமத்துவம் உறுப்பு 39ல் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(ஒரு சின்ன விறுவிறுப்பிற்காக
இந்த உறுப்புகளில்(articles) என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நீங்களே தேடி படிக்குமாறு தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்.)
சகோதரத்துவம்
சகோதரத்துவம்
என்பது எல்லோர் மீதும் அன்பு செலுத்தி மரியாதையாக நடத்த வேண்டும், இனம்,மொழி, மதம்
ஆகிய வேற்றுமைகளை கடந்து எவ்வித பாகுபாடும் இல்லாமல் சகோதர சகோதரிகளை போல வாழ வேண்டும்
என்பது தான். ஒருமைப்பாடு(Intergrity) என்ற வார்த்தை 42ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் முகப்புரையில்
சேர்க்கப்பட்டது. சகோதரத்துவம் என்பது மிக ஆழமான பொருள் கொண்ட ஒரு வார்த்தை ஆகும்.
தனிமனிதருக்கு கொடுக்கும் மரியாதை மற்றும் அன்பு செலுத்துதல், நமக்குள் இருக்கும் வேற்றுமைகளை
மதித்து ஒற்றுமையாக இருத்தல். இந்திய நிலப்பரப்பு பல விதமான கலாச்சாரமும் பண்பாடும்
உடைய சமூகம், அதனுள் இருக்கும் வேற்றுமைகளை நம்மால் தூக்கி எறிந்துவிட முடியாது. மற்றவர்களின்
வேற்றுமையை அங்கீகரித்து மதிக்க வேண்டும். உதாரணமாக பல மொழிகள் பேசும் இந்த நிலத்தில்,
உங்கள் தாய்மொழியை பின் தள்ளிவிட்டு எல்லோரும் ஒரு மொழியை பேசலாம் வாருங்கள் என்பது
சகோதரத்துவம் அல்ல, நீங்கள் உங்கள் மொழியை பேசுங்கள் நாங்கள் எங்கள் மொழியை பேசுகிறோம்,
நம்முடைய புரிதலுக்கு ஒரு தொடர்பு மொழியை பயன்படுத்தலாம் என்று அவர்கள் மொழிக்கும்
மதிப்பளிப்பது தான்.
முகப்புரை அரசியலமைப்பின்
ஒரு பகுதியா இல்லையா?
முகப்புரை
என்பது இந்திய அரசியலமைப்பின் ஆன்மா என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
எம் ஹிதயத்துல்லா. பல நேரங்களில் உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் இந்திய முகப்புரையை
மேற்கோள்களாக பயன்படுத்தி இருக்கிறது.
·
1960ல்
நடந்த பெருபாரி வழக்கில் உச்சநீதிமன்றம் முகப்புரையை இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி
அல்ல என்று அறிவித்தது, "முகப்புரை என்பது நம் அரசியலமைப்பை உருவாக்கியவர்களின்
மனதிற்கான சாவி, அதனால் அதில் உள்ளவற்றை நடைமுறை படுத்த முடியாது" என்று கூறியது.
·
பின்
1973 நடந்த கேசவநந்த பாரதி வழக்கில் அதே உச்சநீதிமன்றம் "முகப்புரை என்பது இந்திய
அரசியலமைப்பின் ஒரு பகுதி தான், அதை மாற்றலாம் ஆனால் அதன் அடிப்படை தன்மை மாறாமல் இருக்கவேண்டும்"
என்று அறிவுறுத்தியது. இங்கு தான் முதன்முதலாக"அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு"
என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. அதன் பிறகு வந்த பல வழக்குகளில் முகப்புரை இந்திய
அரசியலமைப்பின் ஒரு பகுதி தான் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
42ஆவது
அரசியலமைப்பு திருத்தில் கொண்டு வந்த பொதுவுடைமை மற்றும் மதச்சார்பின்மை ஆகிய இரண்டு
வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஒரு வழக்கு
தொடுக்கப்படும், அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும். இங்கு கடந்த நவம்பர் 27ஆம்
தேதி உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்சிவ் கண்ணா கூறியதை மேற்கோள் காட்டினால் பொருத்தமாக
இருக்கும்.
'சோசலிஸ்ட்'
மற்றும் 'மதச்சார்பற்ற' வார்த்தைகள் முன்னுரையில் சேர்க்கப்பட்ட நாற்பத்தி நான்கு ஆண்டுகளுக்குப்
பிறகு, 2020 இல் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்பது குறிப்பாக மனுதாரரின் நோக்கங்களை
கேள்விக்குள்ளாக்குகிறது. இந்தச் சொற்கள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது
அவற்றின் அர்த்தங்களை ‘இந்திய மக்களாகிய நாம்’ எந்த வித சந்தேகமும் இல்லாமல் புரிந்துகொண்டிருக்கிறோம்."
"மேற்கத்திய
நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தத்தை ஒருவர் எடுத்துக் கொள்ளக் கூடாது... சோசலிசம்
என்பது சமத்துவ வாய்ப்பு இருக்க வேண்டும், நாட்டின் செல்வம் சமமாகப் பங்கிடப்பட வேண்டும்
என்றும் பொருள் கொள்ளலாம்,” என்று
சஞ்சிவ் நீதிபதி கன்னா வாய்மொழியாகக் குறிப்பிட்டார்.
அடுத்த அத்தியாயத்தில்
ஒன்றியம் மற்றும் அதன் ஆட்சி நிலப்பரப்பை பற்றி பார்க்கலாம்.


Comments
Post a Comment