காகித அன்பு
இப்படி இருக்கையில் ஒரு நாள் அவன் எழுதிய சிறுகதையை பாராட்டி அவன் அலுவலக முகவரியில் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. இந்த நூற்றாண்டில் கடிதமா? என்று பத்திரிகை அலுவலகமே கொஞ்சம் ஆடித்தான் போனது. கடிதத்தை பிரித்து படித்தவர்களுக்கு மேலும் அதிர்ச்சி, அந்த கடிதம் ஒரு வாசகியிடம் இருந்து வந்திருந்தது. மக்கள் படிக்கிறார்கள் என்பதே அவனுக்கு அபூர்வமாக இருந்தது, அதுவும் தன்னுடைய கதைகளை ஒரு பெண் வாசகர் படிக்கிறார் என்பது, அவனுக்கு மேலும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. அந்த பெண் இப்படியாக எழுதி இருந்தால்,
“பலமுறை உங்களை தொடர்புக்கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் உங்கள் வீணாப்போன கம்பெனி, என்னுடைய ஒரு மெயிலுக்கும் பதிலளிக்கவில்லை. ஆகவே ஆதி காலத்து முறையை பின்பற்றி இருக்கிறேன், இதற்கும் எனக்கு பதில் வரவில்லை என்றால், எனக்கு சொல்வது என்று தெரியாது”
என்று கூறியிருந்தார். கடிதத்தை படித்துவிட்டு, வேகமாக சென்று பத்திரிகை ஆசிரியரின் கணிணியில் உள்ள ஜிமெயில் உள்நுழைந்து பார்த்தால், வாசகியின் பல மெயில்கள் ஸ்பாம் ஃபோல்டரில் இருந்தது. அத்தனை மெயில்களையும் ஒவ்வொன்றாக படித்துவிட்டு அனைத்திற்கும் பதில் அனுப்பிக்கொண்டு இருந்தான். பேனா பக்கிரிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, காற்றில் மிதப்பது போல இருந்தது. “என்னுடைய கதைகளையும் படித்துவிட்டு பாராட்ட ஒரு ஜீவன் இருக்கிறதே” என்று மனதிற்குள் மகிழ்ந்துக்கொண்டான்.
இதன் பிறகு மாறனின் கதைகள், மிக நேர்த்தியாக இருந்தன, வாசகர் வட்டம் கொஞ்சம் விரிவடைந்தது. எல்லா கலைஞர்களுக்கும் இந்த உணர்வு புரியும், ஒரே ஒரு நபர் பாராட்டி விட்டால் கூட போதும், அதை எண்ணி எண்ணி பல நாட்கள் பூரிப்பு அடைந்து கொண்டு இருப்போம். வாராவாரம் அந்த வாசகியிடம் இருந்து மெயில் வருவதும், அந்த மெயிலில் உள்ள கருத்துகளையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு அதை தன் எழுத்தில் பிரதிபலிப்பு செய்வதையும் வாடிக்கையாக்கி கொண்டான் மாறன்.
சில மாதங்களில் பத்திரிக்கையும் நன்றாக விற்க தொடங்கின, இவனுக்கும் சிறியதாக ஒரு சம்பள உயர்வும் வந்தது. மாறன் மெயிலில் எழுதும் போதெல்லாம் நன்றியுணர்ச்சி பொங்க எழுதுவான், அந்த பெண்ணை மிகவும் பாராட்டி எழுதுவான், “உங்களின் அன்பும் ஊக்கமும் தான் காரணம்” என்று, பாராட்டு மழையை அள்ளித் தெளிப்பான். இப்படியாக ஒரு வருடம் கழிந்துவிட்டது. இவனுக்கு இந்த வாசகியின், ஊரும் தெரியாது, பெயரும் தெரியாது. ஆனால் இவன் மட்டும் தன்னை பற்றி அத்தனையும் தெரிவித்துவிட்டான், தொலைபேசி எண், வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகிய சில முக்கியமான தகவல்கள் தான் மிச்சம். ஒற்றை பனைமரம் போல் தனியாக இருக்கும் அவனுக்கு, யாரேனும் கொஞ்சமாக நெருக்கமாகி விட்டால் போதும் அத்தனையும் உளரிவிடுவான், கேட்டால் உண்மையாக இருப்பதாக கூறுவான். ஆனால் இவன் வட்டாரத்தில் உள்ள மற்றவர்களை பொறுத்தவரை அவன் ஒரு அறுவை பேர்வழி, வாயை திறந்தால் மூட மாட்டான் என்று முடிவுக்கட்டியிருந்தார்கள்.
இப்படியாக இருக்க தீடிரென அந்த ஒரு வாரம் அந்த வாசகியிடம் இருந்து எந்த மெயிலும் வரவில்லை, மாறனுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது, ஏதேதோ கற்பனை செய்ய ஆரம்பித்தான். அவர்களுக்கு உடம்பு சரியில்லையோ ?, இந்த கதை பிடிக்கவில்லையோ ?, நாம் ஏதாவது வரம்பு மீறி பேசிவிட்டோமா? என்று இப்படி ஏகப்பட்ட எண்ணங்கள் அவனை ஆட்கொண்டது. ஏதோ தன் உலகமே இருண்டு விட்டது போல் உணர்ந்தான். இப்படியே ஒரு வாரம் பல வாரங்கள் ஆனது, எந்த மெயிலும் வரவில்லை. அத்தோடு அந்த வாசகியின் மெயில்களும் வருவதில்லை. வாரம் வாரம் எழுதும் தன்னுடைய கதைகளில் இரகசிய தகவல் அனுப்பினான், எதுவும் பலனளிக்கவில்லை. மறுபடியும் அதே தனிக் காட்டு ராஜா என்ற நிலைக்கு வந்திருந்தான். பத்திரிகை கொஞ்சம் பெரியதாக வளர்ந்திருந்தது, வாசகர்கள் கூடியிருந்தார்கள், முன்பிருந்த நிலைக்கு இப்போது சிறிது முன்னேற்றம். அன்றிரவு அந்த அலுவலகத்தில் தனியாக அமர்ந்துகொண்டு அடுத்த வாரத்திற்கான கதையை மறுபடியும் எப்போதும் போல எழுதிக்கொண்டு இருந்தான் “பேனா பக்கிரி”.

Comments
Post a Comment