இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 9


9

   கொஞ்சம் பெரிய இடைவெளியாகிவிட்டது, வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த பகுதியில் அடிப்படை உரிமைகளை பற்றி பார்க்கப்போகிறோம். "அடிப்படை உரிமைகள்" என்றால் நமக்கு மட்டும் அடிப்படையானவை அல்ல நம் அரசியலமைப்பின் அடிநாதமே இதன் மீது தான் கட்டியெழுப்பட்டுள்ளது. இதன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்  அல்லது அடிப்படை உரிமைகள் மீறப்படுவது என்பது மக்களாட்சி தத்துவத்தையும் இந்திய அரசியலமைப்பையும் சிதைக்கும் முயற்சிகவே பார்க்க முடியும். 

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி விவரிக்கின்றன. அரசியலமைப்பு உருவான போது ஏழு அடிப்படை உரிமைகள் இருந்தன, அவை பின்வருமாறு,
  • சம உரிமை 
  • சுதந்திரத்திற்கான உரிமை 
  • சுரண்டலை தடுப்பதற்கான உரிமை 
  • சமயச் சுதந்திர உரிமை 
  • பண்பாடு, கல்வி பற்றிய உரிமைகள் குறித்த சில சட்டங்களுக்கான பாதுகாப்பு உரிமை 
  • சட்டத்தீர்வுகளுக்கான உரிமை 

விதவிதமாய் வித்தியாசமாய் 
 என்னதான் அரசியலமைப்பின் அடிநாதமாக அடிப்படை உரிமைகள் இருந்தாலும், அவற்றிற்கும் சில குறைகள் உள்ளன. 
  • சில அடிப்படை உரிமைகள் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும், வெளிநாட்டினர் அந்த உரிமைகளை அனுபவிக்க முடியாது.
  • அடிப்படை உரிமைகள் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல அரசாங்கம் நினைத்தால் அவைகளின் மீதும் கட்டுபாடுகள் விதிக்க முடியும். தனிமனித சுதந்திரம் மற்றும் சமூக ஒழுங்கு ஆகியவற்றிற்கு இடையே ஒரு துலாக்கோல் போல அடிப்படை உரிமைகள் செயல்படும்.
  • பல அடிப்படை உரிமைகள் அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை பாதுகாப்பவை, சில அடிப்படை உரிமைகள் மட்டுமே அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பவை
  • இந்த அடிப்படை உரிமைகள் சட்ட விசாரணைக்கு உட்பட்டவை, இவை மீறப்படும் போது, நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
  • இவற்றை மாற்றவே முடியாததா  ? என்று கேட்டால், அது தான் கிடையாது. நாடாளுமன்றம் நினைத்தால் மொத்த அடிப்படை உரிமைகளையும் மாற்றி விட முடியும், ஆனால் கடந்த கால அனுபவங்களில் இருந்து உச்ச நீதிமன்றம்"இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு" என்ற ஒரு வார்த்தையை குறிப்பிட்டுள்ளது. அடிப்படை உரிமைகளில் என்ன மாற்றம் வேண்டும் என்றாலும் செய்யலாம், ஆனால் அந்த அடிப்படை கட்டமைப்பு மாறக் கூடாது. அப்படி அந்த கட்டமைப்பு சிதைக்கப்பட்டால் அந்த மாற்றத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும்.
  • அவசரநிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளில் சட்டப்பிரிவு 20 மற்றும் 21 தவிர மற்ற அனைத்து உரிமைகளும் செயலிழந்து போகும்.
  • இராணுவம், துணை இராணுவம், ஆயுதப்படை, காவல்துறையினர் போன்றோர்களுக்கு துறை சார்ந்து விதிக்கப்படும் கட்டுபாடுகள் வெளிப்படையாக பார்த்தால் அடிப்படை உரிமைகளை மீறுதல் போல தென்பட்டாலும் அது மீறுதலில் உட்படாது.
  • உதாரணமாக ஒரு இராணுவ வீரர் பணியில் இருக்கும் போது பொது வெளியில் கருத்து தெரிவிப்பதோ, அல்லது தனக்கு பிடித்த அரசியல் கட்சியில் சேருவது போன்ற நடவடிக்கைகளில் இருந்து தடைசெய்யப்பட்டு இருப்பார். இந்த கட்டுபாடுகள் அவரின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போல தெரிந்தாலும், ஒரு ஒழுங்கை நிலைநாட்ட இது தேவை என்பதால், இவற்றிற்கு அடிப்படை உரிமைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு நாடாளுமன்றம் இவர்களுக்கு என்று சில சிறப்பு சட்டங்களை ஏற்படுத்தி உள்ளது.
  • இராணுவ ஆட்சியின் போது அடிப்படை உரிமைகள் செயலிழந்து போகும்.
இப்படி பல முரண்பாடுகள் கொண்டது தான் அடிப்படை உரிமைகள். மேலோட்டமாக பார்த்தால் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு இயற்றப்பட்டதே இவை. யாருக்கும் மிகப்பெரிய அதிகாரத்தை வழங்காமல் மக்களுக்கும் அரசுக்கும் அதிகாரம் பரவலாகப்பட்டு உள்ளது.

சட்டப்பிரிவு 12: 

   பொருள்வரையறை:  "அரசு" என்பது, இந்திய அரசையும் நாடாளுமன்றத்தையும், மாநிலங்கள் ஒவ்வொன்றின் அரசையும், சட்டமன்றத்தையும், இந்திய ஆட்சிநிலவரைக்குள்ளோ இந்திய அரசின் கீழ்  இருக்கும் உள்ளாட்சி அல்லது பிறவகை அதிகார அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கும்.

சட்டப்பிரிவு 13:  

    அடிப்படை உரிமைகளுக்கு முரணான அல்லது அவற்றைத் திறக்குறைவு செய்யும் சட்டங்கள்  அல்லது அடிப்படை உரிமைகளை பறிக்கும் அல்லது ஒடுக்கும் சட்டம் எதனையும் அரசு இயற்றுதல் ஆகாது; மேலும், இந்தக் கூறினை மீறும் வகையில் இயற்றப்படும் சட்டம் எதுவும், இல்லாநிலையது ஆகிவிடும்.
சமன்மைக்கான உரிமை

சட்டப்பிரிவு 14: 

    அரசு, இந்திய ஆட்சிநில எல்லைக்குள் சட்டத்தின் முன் அனைவரும் சமம்.  சட்டங்கள் சமமாக பாதுகாப்பு அளிக்க  வேண்டும், அதில்  எவர் ஒருவருக்கும் பாகுபாடு காட்டக்கூடாது.

 சட்டத்தின் ஆட்சி (Rule of Law) சட்டப்பிரிவு 14 என்ன சொல்கிறது?
  • "அரசு எந்தவொரு நபருக்கும் சட்டத்தின்படி சமத்துவத்தை மறுக்கக்கூடாது அல்லது இந்தியாவிற்குள் உள்ள எல்லா நபர்களுக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்."இதன் பொருள், எல்லோரும் சட்டத்தின் முன் சமமானவர்கள் (Equality Before Law) என்றும், ஒவ்வொருவரும் சமமான சட்ட பாதுகாப்பைப் பெற வேண்டும் (Equal Protection of the Laws) என்றும் அர்த்தம்.  Rule of Law என்பது ஜனநாயக நாட்டின் அடிப்படை கொள்கையாகும். இதன் மூலம், சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதைக் இது குறிக்கிறது.
இந்தியாவில் Rule of Law மூன்று முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது:

  • சட்டத்தின் உயர்நிலை (Supremacy of Law) – யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை.
  • சட்டத்தின் முன் சமத்துவம் (Equality Before Law) –அனைவரும் சட்டத்தின் முன் சமமாக கருதப்பட வேண்டும்.
  • சட்டத்திற்கே முக்கியத்துவம் (Predominance of Legal Spirit) – எந்த அரசாங்க அதிகாரியும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது.
  • இந்திய உச்சநீதிமன்றம் "சட்டத்தின் ஆட்சியை" இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்று என்று கூறியுள்ளது. இதை எந்தவிதமான சட்டத்திருத்தின் மூலமும் மாற்ற இயலாது. ஆனால் இந்த சட்டப்பிரிவும் அசைக்க முடியதாவை அல்ல, இதற்கும் சில விதிவிலக்குகள் உண்டு. 
குடியுரசு தலைவருக்கும் ஆளுநருக்கும் இந்த சட்டத்தில் இருந்து பாதுகாப்பு உண்டு.
  • குடியரசுத்தலைவர் அல்லது ஒரு மாநிலத்தின் ஆளுநர் அல்லது இராஜப்பிரமுகர் தமது பதவியின் அதிகாரங்களைச் செலுத்துவதற்காகவும் கடமைகளைப் புரிவதற்காகவும், அல்லது அந்த அதிகாரங்களைச் செலுத்துவதிலும் கடமைகளைப் புரிவதிலும் அவர் செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயல்கள் எதற்கும், எந்த நீதிமன்றத்திலும் பதிலளிக்க தேவையில்லை. (சட்டப்பிரிவு 361)
  • பதவியில் இருக்கும் சமயத்தில் குடியரசு தலைவர் மீதோ அல்லது ஆளுநர் மீதோ எந்த விதமான உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை நீதி மன்றத்தால் மேற்கொள்ள முடியாது.பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவரையோ அல்லது ஆளுநரையோ கைது செய்ய எந்த நீதிமன்றத்தாலும் உத்தரவு பிறப்பிக்க முடியாது.
  • நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ நடைபெற்ற விஷயங்களை உண்மை தன்மையுடன் எந்த ஒரு தனிநபரும் பொது ஊடகங்களில் வெளியிடலாம், அதன் மீது உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை யாராலும் மேற்கொள்ள முடியாது. (சட்டப்பிரிவு 361 A)
  • எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் (சட்டப்பிரிவு 105) நாடாளுமன்றத்தில்   பேசிய எதற்காகவும்  அல்லது வாக்களித்த எதற்கும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் பொறுப்பாகமாட்டார்கள். 
  • எந்த சட்டமன்ற உறுப்பினரும்(சட்டப்பிரிவு 194) சட்டமன்றத்தில் பேசிய எதற்காகவும் அல்லது வாக்களித்த எதற்கும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் பொறுப்பாகமாட்டார்கள். 
  • வெளிநாட்டு ஆட்சியாளர்கள், தூதர்கள் போன்றோரை இந்திய சட்டத்தால் தண்டிக்க இயலாது. அதே போல் ஐ.நா மற்றும் அதன் அமைப்புக்களுக்கு இந்திய சட்டத்தில் இருந்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
சட்டப்பிரிவு15: 

        சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை                காட்டுதலுக்குத் தடை: 
  • அரசு, குடிமக்கள் எவரையும் சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை கொண்டோ அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு, வேற்றுமை காட்டுதல் ஆகாது.(சட்டப்பிரிவு15(1))
  • குடிமக்கள் எவரையும் சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை கொண்டோ அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு, தகவுக்கேடு, கடப்பாடு, வரைத்தடை அல்லது வரைக்கட்டு எதற்கும் உட்படுத்துதல் ஆகாது. (சட்டப்பிரிவு15(2))
  • "No citizen shall be discriminated, on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them, be subject to any disability, liability, restriction, or condition"(Article 15B)
  • இந்த சட்டத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு (அ) மற்றும் (ஆ) பிரிவு. (அ) பிரிவு குடிமக்கள் எவர் ஒருவரையும் சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை கொண்டோ அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு பொது இடங்களிலோ அல்லது பொதுவான இடத்தில் நுழையவோ அல்லது பயன்படுத்தவோ தடைவிதிக்க முடியாது, தடைவிதிக்கக்கூடாது. (ஆ) பிரிவு குடிமக்கள் எவர் ஒருவரையும் சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் இவற்றை கொண்டோ அல்லது இவற்றுள் ஏதேனும் ஒன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு அரசின் பொது சொத்துக்கள் மற்றும் பொதுவான வசதிகளை பயன்படுத்த தடைவிதிக்க முடியாது, தடைவிதிக்க கூடாது.
இந்த "disability, liability, restriction, condition" ஆகிய நான்கும் சமத்துவத்திற்கு எதிராக செயல்படுவை. அவை எந்த மதம், சாதி, இனம், பாலினம், பிறந்த இடம் என்பதன் அடிப்படையில் மட்டும் விதிக்கப்படக்கூடாது என அரசியலமைப்பு உறுதி செய்கிறது.

1. Disability (முடக்குதல்/தடுப்பு/தகவுக்கேடு): இது ஒரு நடவடிக்கையில் தடை விதிப்பதை குறிக்கும். எடுத்துக்காட்டாக,ஒரு உணவகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு உணவு வழங்க மறுப்பது ஒரு "disability" ஆகும்.

 2. Liability (பொறுப்பு/கடப்பாடு): ஒரு அரசு அலுவலகம் (Government Office) ஒரு வேலைக்கு பெண்களை மட்டும் சேர்க்க மாட்டோம் என்று கூறினால், அது சட்டப்பிரிவு 15(2) க்கு எதிரானது. அந்த அரசு அலுவலகம் நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வேண்டும்.

3. Restriction (கட்டுப்பாடு):  இது ஒரு குறிப்பிட்ட செயலில் தடை விதிப்பதை குறிக்கும். உதாரணம்: ஒரு குறிப்பிட்ட பாலினத்தினரை (பெண்கள்/ஆண்கள்) சில இடங்களில் உள்ளே செல்ல அனுமதி மறுப்பது.

4.Condition (குறிப்பிட்ட நிபந்தனை/வரைத்தடை): இது கொடுத்த நிபந்தனையை பூர்த்தி செய்யாவிட்டால் ஒரு நபரை வசதியிலிருந்து விலக்குவதைக் குறிக்கிறது. உதாரணம்: அரசு உதவித் தொகையை பெற ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் கூடுதல் ஆவணங்கள் கேட்பது "condition" ஆகும்.
  • அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று சிறப்பு திட்டம் மூலம் நலத்திட்டங்களை செய்தாலோ அல்லது இட ஒதுக்கீடு வழங்கினாலோ அதை வேறுபாடு காட்டுவதாக கருதப்படாது (சட்டப்பிரிவு 15(3)). 
  • சமூக மற்றும் பொருளாதார அமைப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு, இட ஒதுக்கீடுகள் வழங்கினாலும், அவை வேறுபாடு காட்டுவதாக கருதப்படாது. (சட்டப்பிரிவு 15(4)முதல் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் ) 
  • அனைத்து கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்  இருக்க வேண்டும் என்ற சட்டம், 2005ல் கொண்டுவரப்பட்ட 93ஆவது சட்டத்திருத்தம் மூலம் சேர்க்கப்பட்டது. இந்த சட்டம் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை தவிர்த்து அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். (சட்டப்பிரிவு 15(5)) 
இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் எல்லோருக்கும் வழங்கப்படுவதில்லை. காரணம் பின்வருமாறு.

க்ரீமிலேயர் என்றால் என்ன ?

    இட ஒதுக்கீட்டால் பயனடைந்து சமூகத்தில் பொருளாதார மற்றும் அந்தஸ்தில் மதிப்பிற்குரிய இடத்தை அடைந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை, மேல்தட்டு மக்களாக கருதி அவர்களின் வருங்கால சந்ததியினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் அளிக்கபடாது. இதை தான் "Creamy layer"(பாலில் உள்ள ஆடை போல் சமூகத்தில் மேல்தட்டில் இருப்பவர்கள்). 

யார் எல்லாம் "க்ரீமிலேயர்" ?
  • பெற்றோரின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு, அவர்கள் க்ரீமிலேயர் மற்றும் க்ரீமிலேயர் அல்லாதவராக பிரிக்கப்படுவர். 
  • பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருந்தால், அந்த நபர் க்ரீமிலேயரின் கீழ் வருவார். 
  • ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குக் குறைவாக இருந்தால், அந்த நபர் க்ரீமிலேயர் அல்லாத பிரிவின்  கீழ் வருவார். 

     கூடுதல் தகவல்: தமிழ்நாடு அரசால் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டாலும், மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க OBC க்ரீமிலேயர் அல்லாதோர் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாகும். க்ரீமிலேயர் அல்லாத சான்றிதழ் பெற்ற நாளிலிருந்து ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும், அதாவது நீங்கள் எப்போது சான்றிதழை பெற்றாலும் அது ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ல் காலாவதியாகிவிடும். இந்த சான்றிதழின் காலக்கெடு மார்ச் முதல் மார்ச் வரை (நிதி ஆண்டு).

இந்தச் சான்றிதழைப் பெறுவதற்கான தகுதிகள் பின்வருமாறு:

*க்ரீமிலேயராக இல்லாதவர்கள் மட்டுமே இந்தச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்*
  • பெற்றோர் இருவரும் அல்லது பெற்றோரில் யாராவது ஒருவர் மத்திய அரசின் குரூப் C மற்றும் D இன் கீழ் பணிபுரிந்தாலும், தமிழ்நாடு மாநில அரசின் குரூப் II, III மற்றும் IV இன் கீழ் பணிபுரிந்தாலும், அவர்/அவள் இந்தச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்.
  • ஒருவர் மத்திய அரசின் குரூப் B அல்லது தமிழ்நாடு மாநில அரசின் குரூப் I இன் கீழ் பணிபுரிந்தால், அவர்/அவள் தகுதியுடையவர்.  அதாவது, அவரது/அவளுடைய பெற்றோருக்கு எந்த வகையான வருமானமும் இல்லை என்றால், அந்த நபர் OBC அல்லாத கிரீமிலேயர் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • கணவர் மத்திய அரசின் கீழ் பணிபுரிந்தால், அவரது மனைவியின் பெற்றோர் எந்த வகையான வருமானமும் பெறவில்லை என்பதை வழங்குவதன் மூலம் OBC NCL(Non Creamy Layer) சான்றிதழுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்.
இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க தகுதியில்லாதவர்கள் பின்வருமாறு : 

  • BC மற்றும் MBC இன் கீழ் வரும் ஆனால் மத்திய அரசின் OBC பிரிவின் கீழ் உள்ள சில சாதிகள் இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியாது.
  • IPS, IAS மற்றும் IFS போன்ற குரூப் A சேவைகளின் கீழ் பணிபுரியும் பெற்றோர்களின் பிள்ளைகள் இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் அல்ல.
  • விண்ணப்பதாரரின் பெற்றோர் மத்திய அரசின் குரூப் B மற்றும் C இன் கீழ் பணிபுரிந்தாலும், பெற்றோர் மாநில அரசின் குரூப் 1 இன் கீழ் பணிபுரிந்தாலும், அவர்/அவள் இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் அல்ல.
  • விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்தைத் தாண்டினால், அவர்கள் இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் அல்ல.
  • விண்ணப்பதாரரின் பெற்றோர் தனியார் துறையில் தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் அல்லது பொறியாளர்களாக பணிபுரிந்து, ஆண்டுக்கு 8 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டினால், அவர்கள் இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
பொருந்தக்கூடிய வருமானம்
  • OBC அல்லாத க்ரீமிலேயர் சான்றிதழின் பொருந்தக்கூடிய தன்மை பெற்றோரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • ஆண்டு வருமானத்தைத் தவிர, மொத்தமாக பெற்றோர் 8 லட்சத்தை,  வேறு ஏதேனும் வருமான வழிகளைப் பெறுகிறார்களா என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.
  •  தனியார் துறைகளில் பணிபுரியும் பெற்றோர்கள் பெறும் வருமானமும் மொத்தத் தொகையை ஒருங்கிணைத்து கருத்தில் கொள்ளப்படும்.
  • விவசாயம் மற்றும் விவசாயம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
சட்டப்பிரிவு 16 : 

பொது வேலைவாய்ப்புகளில் சமமான வாய்ப்புகள் 

    குடிமக்கள் எவரையும் சமயம், சாதி, இனம், மொழி, பிறப்பிடம், பாலினம் உறைவிடம் என இவற்றை கொண்டோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் காரணமாகக்கொண்டு, அரசின் கீழுள்ள வேலைவாய்ப்புகளில் வேற்றுமை காட்டுதலோ அல்லது தகுதி இல்லை என கூறுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

 இந்த சட்டத்திற்கும் சில விதிவிலக்குகள் உள்ளன: 
  • குறிப்பிட்ட பகுதிகளில் சில பொது வேலைவாய்ப்புகளுக்கு வசிப்பிடத்தை ஒரு நிபந்தனையாக நாடாளுமன்றம் பரிந்துரைக்க அனுமதிக்கும் வகையில், 1957 ஆம் ஆண்டு பொது வேலைவாய்ப்பு (குடியிருப்புக்கான தேவை) சட்டம் இயற்றப்பட்டது, அத்தகைய தேவைகளை விதித்த ஏற்கனவே உள்ள சட்டங்களை ரத்து செய்தது. 
விதிவிலக்குகள்:
  • ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கானா பகுதி அல்லது இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர் அல்லது திரிபுரா யூனியன் பிரதேசங்கள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளுக்கு துணைப் பணிகளில் நியமனங்களுக்கு விதிவிலக்குகளை இந்தச் சட்டம் அனுமதித்தது.
            *1957 ஆம் ஆண்டின் பொது வேலைவாய்ப்பு (குடியிருப்புக்கான தேவை)                       சட்டம் 1974 இல் காலாவதியானது. *
  • ஒரு மாநிலத்தில் அரசு துறைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு போதிய அளவில் பிரதிநிதித்துவம் இல்லையென்றால், மாநில அரசு அவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்கலாம். 
  • உதாரணமாக 2021ஆம் ஆண்டு அன்றைய அ.தி.மு.க அரசு வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியது. இதை எதிர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த மற்ற சாதியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின் உச்சநீதிமன்றம் 2022ஆம் ஆண்டு இந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தது. காரணம் எந்த ஒரு தரவுகளும் இல்லாமல் மிக அவசரமாக அரசியல் காரணங்களுக்காக கொண்டு வரப்பட்டது. தமிழக அரசால் எந்த தரவுகளின் அடிப்படையில் சட்டம் இயற்றப்பட்டது என்ற கேள்விக்கு சரியான சாட்சியங்களை சமர்ப்பிக்க இயலாததால் இந்த இட ஒதுக்கீட்டை மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த நிறுவனத்தின் பணியாளர்கள் அந்த மதத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும் என்ற விதிக்கு அடிப்படை உரிமைகளில் இருந்து விலகளிக்கபட்டுள்ளது.
இட ஒதுக்கீடு என்றால் என்ன ?


இட ஒதுக்கீடு பற்றி விளக்குவதற்கு நாம் நம் வரலாற்றையும் திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது. வேத காலத்தின் ஆரம்பத்தில் மிக தளர்வாக இருந்தது வர்ணாசிரமம், அதவாது எந்த வர்ணத்தில் பிறக்கும் யார் வேண்டுமானாலும், எந்த வர்ணத்தின் தொழிலையும் செய்யலாம் என்றிருந்த நிலை வேத காலத்தின் இறுதியில் மிகவும் இறுகி, ஒரு வர்ணத்தில் பிறந்தவர் மற்றொரு வர்ணத்தின் தொழிலை செய்யக்கூடாது என்று மாறியது. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் என்ற மூன்று பிரிவுகள் மட்டுமே இருந்த நிலையில், காலப்போக்கில் சூத்திரர்கள் என்ற பிரிவு உண்டாக்கப்பட்டு அவர்களின் உழைப்பை மற்ற முன்று வர்ணத்தினரும் சுரண்டல் செய்தனர். இங்கிருந்து தான் சாதிய படிநிலைகள் உருவானது. இங்கிருந்து தான் குலத்தொழில் உருவானது.


 இப்படி பல நூறு ஆண்டுகளாக அடிப்படை கல்வி, முறையான ஊதியம், சமமான மரியாதை என்று எல்லாம் மறுக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் மக்கள் தங்களுக்கு எதிராக மாறிவிடக் கூடாது என்று முடிவு செய்து மதத்தால் இந்தியாவை பிரித்து ஆள வேண்டும் என்ற விரும்பிய ஆங்கிலேயர்கள். மதத்தின் அடிப்படையில் தனி தேர்தல் தொகுதிகளை உருவாக்கி இந்த மதத்தினருக்கு இவ்வளவு  இடம்  ஒதுக்கீடு என்று ஆரம்பித்து, பல ஆண்டுகள் கழித்து 1932ல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று ஆங்கில அரசு முடிவு செய்து, தனி தொகுதிகளை ஒதுக்கியது. 

    இதை எதிர்த்து காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் ஆரம்பித்தார். காரணம் ஒடுக்கப்பட்டவர்களும் இந்துக்கள் தான், அவர்களுக்கு தனி தொகுதி வழங்கினால், அவர்கள் இந்து மதத்தில் இருந்து அந்நியப்படுத்தபடுவார்கள் என்று கூறினார். ஆனால் எந்த அதிகாரமும் இல்லாமல் இருக்கும் ஒரு கூட்டத்திற்கு எப்படியாவது அதிகாரத்தை கொடுத்து விட வேண்டும் என்பது தான் அம்பேத்கரின் நிலைப்பாடு. இங்கு ஒரு பெரிய முரண் என்னவென்றால், தனி தொகுதியால் இந்து மதத்தில் இருந்து அந்நியப்பட்டு விடுவார்கள் என்று சொன்ன காந்தி, அவர்கள் ஏற்கனவே இந்து மதத்தால் தான் அந்நியப்பட்டு இருக்கிறார்கள் என்று உணரவில்லை. 


    பூணா ஒப்பந்தம் கையெழுதாகி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இணை தொகுதியாக கொடுக்கப்பட்டது(அன்று தனி தொகுதி என்றால் ஒரு தொகுதி இஸ்லாமியர்களுக்கு என்று வழங்கப்பட்டால், அங்கு இஸ்லாமியர்கள் தான் வேட்பாளராக நிற்க இஸ்லாமியர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இணை தொகுதி என்றால் அங்கு ஒரு இஸ்லாமியர் வேட்பாளராக நின்றாலும் எல்லா மக்களும் வாக்களிக்க முடியும்). இதுதான் வகுப்புவாரி இட ஒதுக்கீடு, ஆங்கிலத்தில் "Communal award" என்று அழைக்கப்படும்.

    இந்நிலையில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், பல சமூக சீர்திருத்த இயக்கங்கள் உருவாகின, அவை பிராமணர்களின் சாதிய ஆதிக்கம் மற்றும் அவர்களின் மூட பழக்க வழக்கங்களை எதிர்த்தது. பிராமணர்களுக்கு பல நூறு ஆண்டுகளாக கல்வி கற்கும் வாய்ப்புகள் இருந்ததால் அவர்கள், மிக எளிதாக மற்றும் வேகமாக ஆங்கிலம் கற்று ஆங்கிலேய அரசின் உயர் பதவிகளை அடைந்தனர். 

    1912ல் ஆங்கிலேய அரசின் உயர் பதவிகளில் பிராமணர்களே ஆதிக்கமே மிகுந்து இருந்தது, அதாவது அன்றைய இந்தியாவின் 55% துணை ஆட்சியர்கள், 83% துணை நீதிபதிகள், 72% மாவட்ட முன்சீப்புகள் பிராமணர்களாக இருந்தனர். 1870 முதல் 1918 வரை மெட்ராஸ் பல்கலைகழகத்தில் கலைப்பிரிவில் படித்த 70% மாணவர்கள் பிராமணர்கள், சட்டம் படித்தவர்களில் 73% பிராமணர்கள், ஆசிரியருக்கு படித்தவர்களில் 73% பிராமணர்கள்.


     இந்த ஆதிக்கத்தை எதிர்த்து தான் சுய மரியாதை இயக்கம் தோன்றியது. 1921ல் அன்றைய ஆளுங்கட்சியான நீதிக்கட்சி ஒரு அரசாணையை வெளியிடப்பட்டது, அதற்கு பெயர் "Communal G.O 1921". இதன் மூலம் பிராமணர் அல்லாதோர்க்கு அரசு பதவிகளில் வாய்ப்பளிக்க வழி உருவானது. மொத்தம் 44% சதவீதம் பிராமணர் அல்லாதோர்க்கு இடம் ஒதுக்கப்பட்டது. இங்கு தான் இட ஒதுக்கீடு ஆரம்பமாகிறது, இதன் பின் தான் 1932 வகுப்புவாரி இட ஒதுக்கீடு வருகிறது. சட்டங்கள் இருந்தாலும் அவை எதுவும் சரியாக நடைமுறைபடுத்தப்படவில்லை. இதன் பிறகு நடந்த அத்தனை விஷயமும் கீழே ஒரு காலவரிசையாக  விளக்கப்படுகிறது.





        இந்த இட ஒதுக்கீடு காலவரிசையில் உள்ள ஒவ்வொரு சம்பவமும் மிக நீண்ட மற்றும் தனித்தனியாக விளக்கப்பட வேண்டிய சம்பவங்கள், அவற்றை பற்றி நான் குறிப்பிட போவதில்லை. வாசகர்கள் படத்தில் குறிப்பிட்டுள்ள சம்பவங்களை பற்றி தேடி அறிந்துக்கொள்ள வேண்டுகிறேன். பின்வரும் அத்தியாயங்களில் இவற்றை அந்த அந்த இடத்தில் விவரிக்கிறேன்.

சட்டப்பிரிவு 17: தீண்டாமை ஒழிப்பு 
                "தீண்டாமை" ஒழிக்கப்படுகிறது; எவ்வகையிலும் தீண்டாமையைக் கடைபிடிப்பது கடிந்து தடை செய்யப்படுகிறது. "தீண்டாமை" காரணமாக எழும் தகவுக்கேடு எதனையும் செயலுறுத்துவது சட்டப்படி தண்டனையுறு குற்றச்செயல் ஆகும்.



சட்டப்பிரிவு 18: விருதுப்பட்டங்கள் ஒழிப்பு 

(1) படைத்துறையின் அல்லது கல்விசார் சிறப்புச் சீர்மை அல்லாத பிற விருதுப்பட்டம் எதனையும் அரசு வழங்குதல் ஆகாது.

(2) இந்தியக் குடிமகன் எவரும், அயல்நாட்டு அரசு எதனிடமிருந்தும் விருதுப்பட்டம் எதனையும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகாது.

(3) இந்தியக் குடிமகன் அல்லாத எவரும், அரசின்கீழ்  ஊதியத்திற்கு அல்லது
நம்பிக்கைக்குரிய பதவி ஒன்றை வகிக்குங்கால், அவர் குடியரசுத்தலைவரின் இசைவின்றி, அயல்நாட்டு அரசு எதனிடமிருந்தும் விருதுப்பட்டம் எதனையும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகாது.

(4) அரசின் அரசின்கீழ்  ஊதியத்திற்கு அல்லது நம்பிக்கைக்குரிய பதவி ஒன்றை  வகிக்கின்ற எவரும், குடியரசுத்தலைவரின் இசைவின்றி, அயல்நாட்டு அரசு எதனிடமிருந்தும் பரிசு, பதவியூதியம் எதனையும் அல்லது அவ்வரசு எதன்கீழும் எவ்வகைப் பதவியையும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகாது.

    இங்கு சில விளக்கங்களோடு இந்த அத்தியாயத்தை முடிக்க ஆசைப்படுகிறேன். இங்கு தற்போது பணியாற்றி கொண்டிருக்கும் உண்மையான பெரியாரியவாதிகளும், மார்க்சிய மற்றும் இன்னும் பிற சமூகநீதி செயற்பாட்டாளர்களும் ஏதோ பிராமணர்கள் மீது வெறுப்பு கொண்டு அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்கள் எதிர்ப்பது பிராமணர்கள் மனதில் உள்ள அந்த ஏகாதிபத்திய சிந்தனையை தான், எப்போது எல்லோரும் சமம் என்ற மனநிலை அவர்களுக்குள்  உருவாகிறதோ அன்றே இவர்களுக்கான வேலையும் முடிந்துவிடும். 

    தற்போதைய சுழலில் தமிழ்நாட்டில் சாதிய வன்கொடுமை மற்றும் சாதிய வன்முறைகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சிலர் தங்களை தாங்களே உயர்ந்தவர்கள், வீரர்கள் சூரர்கள் என்று கூறிக்கொண்டு பட்டியல் இன மக்கள் மக்கள் மீது தங்களின் அதிகார வெறியை காட்டுகிறார்கள். உண்மையில் இவர்கள் அனைவருமே கல்வி மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்பவர்களே, ஆனால் இவர்களின் அதிகார வெறியும், பழம்பெருமைகளின் பிம்பங்களே இவர்களிடம் இன்றளவும் சாதி வெறி இருப்பதற்கான காரணம். 

இதை விட மோசமான நிலை பெண்களுக்கு, பழம்பெருமைகளை பேசும் இந்த அத்தனை சாதிகளும் உயர்ந்த முதல் தாழ்ந்தவர் வரை அத்தனை சாதி ஆண்களும், பெண்கள் தனக்கு கீழானவர்கள் என்ற மனநிலையே கொண்டுள்ளனர். படித்தால் எல்லாம் மாறிவிடும் என்று நம்பியிருந்த காலம் மலையேறிவிட்டது. படித்தவர்கள் தான் இப்போது மிக அதிகமான மூட நம்பிக்கை மற்றும் சாதிய பாகுபாடுகள் பார்க்கின்றன. ஆக படிப்பது முக்கியமில்லை எதை படிக்கிறோம் என்பதை தான் இனி நாம் கவனிக்க வேண்டும். 

பெரியாரின் சில வார்த்தைகளை சொல்லி இந்த அத்தியாயத்தை முடிக்கிறேன். என் நிலைப்பாடும் இதுவே....



"ஒரு பெரிய நாடு ஒரு சிறிய நாட்டை ஒடுக்கினால், நான் சிறிய நாட்டிற்கு ஆதரவாக நிற்பேன். 

சிறிய நாட்டில் பெரும்பான்மை மதம் சிறுபான்மை மதங்களை ஒடுக்கினால், நான் சிறுபான்மை மதங்களுக்கு ஆதரவாக நிற்பேன்.

சிறுபான்மை மதத்தில் சாதி இருந்தால், ஒரு சாதி மற்றொரு சாதியை ஒடுக்கினால், நான் ஒடுக்கப்படும் சாதிக்கு ஆதரவாக நிற்பேன் . 

ஒடுக்கப்பட்ட சாதியில், உள்ள ஒரு முதலாளி தனது பணியாளரை ஒடுக்கினால், நான் பணியாளருக்கு ஆதரவாக நிற்பேன்.

அந்த  பணியாளர் வீட்டிற்குச் சென்று தனது மனைவியை ஒடுக்கினால், நான் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்பேன்.

ஒட்டுமொத்தமாக, அடக்குமுறைதான் எனது எதிரி" 

- பெரியார்

SOURCES :





Comments

Popular posts from this blog

சரியான நேரம்

காகித அன்பு