இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 5

மிக பெரிய அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள் எப்படி சிறியதாக  முடிந்துவிடும்..., இன்னும் சிலவற்றை இந்த பகுதியில் பார்ப்போம்.

மதச்சார்பற்ற நாடு

இந்திய அரசியலமைப்பு இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தியுள்ளது. "மதசார்பற்ற" என்று சொல் 1976ல் கொண்டுவரப்பட்ட 42ஆவது சட்டத்திருத்த மூலம் முகப்புரையில் சேர்க்கப்பட்டது. அம்பேத்கர் எழுதியபோது முகப்புரையில் இந்த வார்த்தையே இல்லை. இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதால் இந்தியா மதம் சார்ந்த நாடு என்று புரிந்துக் கொள்ள கூடாது. அரசியலமைப்பில் உள்ள பல உறுப்புகளும் சட்டங்களும் மறைமுகமாக இந்திய மதசார்பற்ற நாடு என்றே உணர்த்துகின்றன. உதாரணமாக அடிப்படை உரிமைகள் உறுப்பு 15 - "எந்த ஒரு இந்தியருக்கும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது" என்று கூறுகிறது. உறுப்புகள் 16, 25, 26, 27, 28, 29 இன்னும் பல. மேற்கத்திய நாடுகளின் "மதச்சார்பின்மைக்கும்" நம் நாட்டின் "மதச்சார்பின்மைக்கும்" கருத்து வேறுபாடுகள் உள்ளன, மேற்கத்திய நாட்டில் மதமானது ஒரு போதும் அரசு நிர்வாகத்தில் தலையிடாது, அரசின் எந்த ஒரு விஷயத்திலும் மத அடையாளங்கள் இருக்காது. இந்தியாவில் உள்ள மதச்சார்பின்மை என்பது எல்லா மதத்தையும் சரிசமமாக பார்ப்பது அவற்றிக்கு மரியாதை அளிப்பது. இந்த கருத்து வேறுபாட்டிற்கு காரணம் மேற்கத்திய நாடுகளில் ஒரு நாட்டிற்கு மொத்தமாகவே ஒரு மதம் தான் இருக்கும், ஆனால் இந்தியாவில் பல மதங்கள் உள்ளன, அவை அனைத்திற்கும் சமமான மரியாதை அளிப்பது தான் இந்திய அரசின் பொறுப்பாகும். 




வயதுவந்ததோர்கான வாக்குரிமை 

இந்திய அரசியலமைப்பு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எல்லோருக்கும் வாக்குளிக்கும் உரிமையை வழங்கியுள்ளது. 61ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் வாக்களிக்களிபதற்கான குறைந்தபட்ச வயது 21ல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் வாக்களிக்கும் உரிமை படிப்படியாக தான் தரப்பட்டது, ஆனால் முதல் முயற்சியாக இந்தியாவில் எவ்வித பாகுபாடும் இன்றி வாக்களிக்கும் உரிமையை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் கையில் அதிகாரம் வழங்குவதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.


ஒற்றைக் குடியுரிமை 

உலகின் பல நாடுகள் இரட்டை குடியுரிமை வசதியை வழங்குகின்றன. ஆனால் இந்திய அரசியலமைப்பு ஒற்றை குடியுரிமையை மட்டுமே வழங்குகிறது. இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தியர் என்பது தான் இதன் நோக்கம். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிந்து இருந்தாலும், நாம் எல்லோரும் பல மொழிகளில் பேசினாலும், இந்தியாவின் எந்த மூலையில் வசித்தாலும், நாம் அனைவரும் இந்தியரே. இந்த ஒற்றை குடியுரிமை அமல்படுத்தியதற்கான காரணம், நமக்குள் எத்தனை வகையான வேறுபாடுகள் இருந்தாலும், கடைசியாக நாம் இந்தியர் என்ற உணர்வோடு வாழ வேண்டும். ஆனால் அந்த கனவு முழுமையாக நிறைவேறியதா என்பது இன்றைய சூழலில் கேள்விகுறியே.

சுதந்திரமான அமைப்புகள் 

இந்திய அரசியலமைப்பு நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை என்ற அமைப்புகளை மட்டும் உருவாக்காமல், சில சுதந்திரமான அமைப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்புகளை யாராலும் அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாது. முக்கியமாக ஆளும் நிர்வாகத்தால் சுதந்திர அமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்த இயலாது. தேர்தல் ஆணையம், இந்திய கணக்காய்வர் மற்றும் தலைமை தணிக்கையர், ஒன்றிய குடிமைப் பணிகள் தேர்வாணையம், மாநில குடிமைப் பணிகள் தேர்வாணையம் இந்த அமைப்பின் இயக்குநர்கள் மற்றும் தலைவர்களுக்கு முழுமையான பணி பாதுகாப்பு, சட்ட பாதுகாப்பு, இந்திய தொகுப்பு நிதியில் இருந்து ஊதியம் இன்னும் பல. இந்த அமைப்புகள் மக்களாட்சியின் முகமாக பார்க்கப்படுகிறது. நேர்மையான தேர்தல், சரியான நேர்மையான தணிக்கை, சரியான நேர்மையான ஆட்களை நேர்மையான முறையில் அரசு வேலைக்கு தேர்ந்தெடுத்தல் என்பது மக்களாட்சி இயந்திரத்தின் அடிப்படை சக்கரமாக பார்க்கப்படுகிறது.

அவசர நிலை 

நாட்டில் சில நேரங்களில் சட்டம் ஒழுங்கு கைமீறி போகும் போது அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. சட்டம் ஒழுங்கை சீர் செய்ய எடுக்கப்படும் நடவடிக்கையாக அவசரநிலை பார்க்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு மூன்று விதமான அவசரநிலைகளை குறிப்பிடுகிறது. 

·             தேசிய அவசரநிலை - போர் மற்றும் மற்ற நாடு நம் மீது தாக்குதல் நடத்தும் போது அமல்படுத்தப்படும். மாநில அவசரநிலை - உள்நாட்டு கலவரம் மற்றும் கலகங்கள், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு  ஏற்படும் போது அமல்படுத்தப்படும். நிதி அவசரநிலைநாட்டின் நிதி நிலைமை மோசமாகும் போது அமல்படுத்தப்படும். இந்த அவசர நிலை அமல்படுத்தப்படும் முறைகளும் அதற்கான வழிமுறைகளும் அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அவசரநிலை இந்திய அரசியலமைப்பின் முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

மூன்றடுக்கு அரசாங்கம் 

இந்திய அரசியலமைப்பின் உருவாக்கத்தின் போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்ற இரட்டை அரசாங்க முறையே இருந்தது. பின்னர் 1992ல் கொண்டுவரப்பட்ட 73ஆவது மற்றும் 74ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. கிராமங்களில் பஞ்சாயத்து அமைப்பும், நகரங்களில் நகராட்சி மற்றும் மாநகராட்சி அமைப்பும் உருவாக்கப்பட்டன. இந்த மூன்றடுக்கு அரசாங்கம் மக்களின் அதிகாரத்தை மேலும் பரவலாக்கியது.

இந்திய அரசியலமைப்பின் குறைகளை வரும் அத்தியாயங்களில் அவ்வபோது சொல்கிறேன், அது தான் பொருத்தமாக இருக்கும்.

இந்திய அரசியலமைப்பின் மீதான விமர்சனங்கள் 

அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் அரசியலமைப்பு வரைவு மீதான விவாதத்தின் போது சில விமர்சனங்களை முன் வைத்தார்கள் அவற்றிக்கான் பதிலை அம்பேத்கரும் மற்ற வரைவு குழு உறுப்பினர்களும் தந்தார்கள்.

கடன் வாங்கப்பட்ட அரசியலமைப்பு என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இது முற்றிலும் அபத்தமான ஒரு வாதம், இந்திய அரசியலமைப்பு பல அரசியலமைப்பின் தழுவல் தான் தவிர மற்றப்படி எந்த ஒரு சட்டமும் வெட்டி ஒட்டப்படவில்லை. இதற்கு அம்பேத்கர் கொடுத்த பதில்:

(இந்த மொழிபெயர்ப்பு என்னுடையது, இதில் குறைகள் இருப்பின் அதை தெரிவிக்கவும்)

"உலக வரலாற்றில் இந்த நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரசியலமைப்பில் புதிதாக ஏதாவது இருக்குமா? என்று ஒருவர் கேட்க விரும்புகிறார். 

முதல் எழுதப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உருண்டோடிவிட்டன. அதைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் அரசியலமைப்புச் சட்டங்களை எழுத்து வடிவிற்கு கொண்டு வருகின்றனர்.

 அரசியலமைப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பது நீண்ட காலமாக இருக்கும் ஒரு முடிவு. அதே போல அரசியலமைப்பின் அடிப்படைகள் என்னனென்ன என்பது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகளின் அடிப்படையில், அனைத்து அரசியலமைப்புகளும் அவற்றின் முக்கிய விதிகளில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். 

இவ்வளவு காலதாமதமாக உருவாக்கப்படும்  அரசியலமைப்புச் சட்டத்தில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்றால், அவை தவறுகளை நீக்கி, நாட்டின் தேவைக்கேற்ப மாற்றியமைக்கப்படும் மாற்றங்கள் மட்டுமே. மற்ற நாடுகளின் அரசியலமைப்புகளின் குருட்டு நகலை தயாரித்து இருக்கிறோம் என்ற குற்றச்சாட்டுபவர்கள், அரசியலமைப்பை போதிய அளவு படிக்கவில்லை ஆய்வு செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். 

வரைவு அரசியலமைப்பில் புதியதாக என்ன உள்ளது என்பதை நான் இங்கு சுட்டிக் காட்டியுள்ளேன், மற்ற அரசியலமைப்புகளைப் படித்தவர்கள் மற்றும் இந்த விஷயத்தை பாகுபாடற்ற முறையில் பரிசீலிக்கத் தயாராக இருப்பவர்கள், சரியாக கடமையை செய்யும் வரைவுக் குழு இத்தகைய குருட்டுத்தனமான மற்றும் அடிமை சாயல் உள்ள அரசியலமைப்பை உருவாக்கினார்கள் என்று குற்றசாட்டை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்."

    இந்திய அரசியலமைப்பு இந்திய அரசு சட்டம் 1935ன் நகல் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதற்கு  அம்பேத்கர் இப்படி பதில் கூறினார்.

"1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் பகுதியை எடுத்து வரைவு அரசியலமைப்பை உருவாக்கியுள்ளோம் என்ற குற்றச்சாட்டிற்கு, நான் மன்னிப்பு கேட்கபோவதில்லை. கடன் வாங்குவதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. இதில் கருத்துத் திருட்டு இல்லை. அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்துக்களில் யாருக்கும் காப்புரிமை உரிமைகள் இல்லை. இந்திய அரசு சட்டம், 1935ல் இருந்து எடுக்கப்பட்ட விதிகள், பெரும்பாலும் நிர்வாக விவரங்களுடன் தொடர்புடையவை. அரசியலமைப்புச் சட்டத்தில் நிர்வாக விவரங்களுக்கு இடமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்".

    இந்தியர் அல்லாத அல்லது இந்தியருக்கு எதிரான அரசியலமைப்பு என்று விமர்சனம் முன்வைக்கப்பட்டது. மற்ற நாடுகளின் அம்சங்கள் கொண்ட இந்த அரசியலமைப்பு இந்திய மண்ணின் எந்த ஒரு அரசியல் வரலாறும்  இல்லாமல் இருக்கிறது என்றார்கள், 

ஹனுமந்தய்யா என்ற அரசியல் நிர்ணயச் சபை உறுப்பினர் இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைக்கிறார்.

"நாங்கள் வீணை மற்றும் சித்தாரின் இசை வேண்டும் என்று கேட்டால் எங்களுக்கு வந்திருப்பதோ ஒரு ஆங்கில பேண்ட் இசை, காரணம் நம் அரசியலமைப்பை உருவாக்குபவர்கள் அந்த வழியில் தான் படித்திருக்கிறார்கள்" 

லஷ்மி நாராயணன் சாகு என்ற அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் இப்படி ஒரு விமர்சனத்தை அளித்தார்.

இந்த வரைவு அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான இலட்சியங்கள் இந்தியாவின் அடிப்படை உணர்வோடு வெளிப்படையான தொடர்பு இல்லை. இந்த அரசியலமைப்பு இந்த மண்ணிற்கு பொருத்தமானதாக இருக்கும் என்று நிருபிக்க முடியாது. அதனால் இந்த அரசியலமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டவுடன் விரைவில் உடைந்து விடும்."

    காந்திய கொள்கைகள் இல்லாத அரசியலமைப்பு என்று விமர்சனம் செய்தனர். அரசியலமைப்பானது கிராம மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளில் இருந்து தொடங்கி இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். முன்பு பார்த்த அதே ஹனுமந்தய்யா இப்படி ஒரு விமர்சனம் வைக்கிறார். 

"மகாத்மா காந்தி விரும்பாத, எதிர்பார்க்காத அரசியல் சாசனம் இதுதான்".

இந்த இரண்டு விமர்சனங்களுக்கும் சேர்ந்தார் போல் அம்பேத்கர் மிக நீண்ட ஒரு பதிலை அளித்தார்.அதன் சுருக்கப்பட்ட தமிழாக்கம்: 

"வரைவு அரசியலமைப்பிற்கு எதிரான மற்றொரு விமர்சனம் என்னவென்றால், அதன் எந்தப் பகுதியும் இந்தியாவின் பண்டைய அரசியலைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்கிறார்கள். புதிய அரசியலமைப்பு ஒரு மாநிலத்தின் பண்டைய இந்து அரசியல் மாதிரியில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், மேற்கத்திய கோட்பாடுகளை இணைப்பதற்கு பதிலாக புதிய அரசியலமைப்பு கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகள் மீது எழுப்பப்பட்டு கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 

 இன்னும் சிலர் தீவிரமான பார்வையை எடுத்து உள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாகாண அரசுகள் எதுவும் வேண்டாம். இந்தியா பல கிராம அரசாங்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.  கிராம சமூகத்தின் மீது இந்த அறிவார்ந்த இந்தியர்களின் அன்பு நிச்சயமாக அளவிடமுடியாததுதான் அப்படி இல்லை என்றால் அது பரிதாபத்திற்குரியது தான். (சிரிக்கிறார்.). ஆனால் கிராமச் சமூகங்களைப் பற்றி பெருமையாகக் கருதுபவர்கள், கிராமங்கள் நாட்டின் விவகாரங்களிலும் தலைவிதியிலும் எப்படி பட்ட சிறியளவிலான பங்கைக் கொண்டிருந்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்வதில்லை; ஏன்? 

நாட்டின் தலைவிதியில் அவர்களின் பங்கை மெட்கால்ஃப் நன்றாக விவரிக்கிறார்:

  “வம்சத்துக்குப் பின் வம்சம் வீழ்ச்சியடைகிறது. புரட்சி அடுத்த புரட்சிக்கு வித்திடுகிறது. ஹிந்து, பதான், மொகுல், மராத்தா, சீக்கியர், ஆங்கிலேயர்  என அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள் போனார்கள். ஆனால் கிராம சமூகங்கள் அப்படியே இருக்கின்றன. இக்கட்டான சமயங்களில் ஆயுதம் ஏந்தி தங்களை பலப்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவு தான். ஒரு எதிரி இராணுவம் நாடு வழியாக செல்கிறது என்றால் கூட கிராம சமூகங்கள் தங்கள் சிறிய கால்நடைகளை தங்கள் மதில்களுக்குள் பாதுகாக்கிறார்கள், மேலும் எதிரிகளை  தடுக்காமல் கடந்து செல்ல அனுமதிக்கிறார்கள்.

 கிராம சமூகங்கள் தங்கள் நாட்டின் வரலாற்றில் ஆற்றிய பங்கு இதுதான். இதை அறிந்தவர்களால் என்ன பெருமையை உணர முடியும்? அவர்கள் எல்லா துன்பங்களில் இருந்ததும் தப்பிப்பிழைத்திருக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் வெறும் உயிர் வாழ்வதற்கு மதிப்பு இல்லை. அவர்கள் எப்படி பட்ட நிலையில் உயிர் பிழைத்தார்கள் என்பதுதான் கேள்வி. நிச்சயமாக ஒரு குறைந்த, ஒரு சுயநலமான அளவில்தான். இந்த கிராமக் குடியரசுகள் இந்தியாவின் அழிவு என்று நான் கருதுகிறேன். 

 மாநிலங்களுக்கு இடையிலான பிரிவினைவாதத்தையும் வகுப்புவாதத்தையும் கண்டிப்பவர்கள் கிராமத்தின் தன்னாட்சி பற்றி பேசிக்கொண்டு முன்வருவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கிராமம் என்பது உள்ளூர்வாதம், அறியாமை, குறுகிய மனப்பான்மை மற்றும் வகுப்புவாதத்தின் குகையே தவிர வேறென்ன? அரசியலமைப்பு வரைவு கிராமத்தை நிராகரித்து தனி நபரை அதன் அலகாக ஏற்றுக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்."

    யானை போன்ற மிக பெரிய அரசியலமைப்பு என்று விமர்சனம் கூறினார்கள். நாம் முன்னரே இதற்கான காரணங்களை பார்த்துவிட்டோம். மொத்த இந்தியாவிற்கான அரசியலமைப்பு என்றால் அது பெரியதாக தான் இருக்கும்.

    வழக்கறிஞர்களின் சொர்க்கம் என்று விமர்சிக்கப்பட்டது. காரணம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள, மிக ஆழமான அர்த்தம் பொதிந்த சொற்றொடர்கள் மற்றும் வாசகங்கள். இதனால் அரசியலமைப்பு வாசிப்பு என்பது சாதாரண மக்களுக்கு எளிதாக இல்லாமல் சுமையாக இருக்கும் என்றார்கள். இந்த விமர்சனம் நியமான விமர்சனம் தான், ஆனால் சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில், அரசியலமைப்பு தான் வேதவாக்கு என்பதால், அதை பொதுவான பொருளில் எழுத முடியாது. சொல்ல வேண்டிய செய்திகளை மிக சரியாக சொல்ல வேண்டும், இல்லை என்றால் அவை குழப்பத்திற்கு தான் இட்டுச் செல்லும்.

இந்த அத்தியாத்தோடு இந்திய அரசியலமைப்பின் வரலாறும் சிறப்புகளும் முடிவுறுகிறது. அடுத்து அத்தியாயம் முதல் நாம் அரசியலமைப்பின் உள்ளே இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த போகிறோம்…

 

குறிப்புகள் தொடரும்......

Comments

Popular posts from this blog

சரியான நேரம்

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 9

காகித அன்பு