சரியான நேரம்
சரியான நேரம்
அந்த பீரியட் முடிந்து ஸ்டாஃப் ரூமில் வந்து அமர்ந்தாள் மீரா. முகம் வாடிப் போயிருந்தது, வெயில் ஒரு பக்கம், இந்த பசங்களுக்கு பாடம் எடுக்குறது ஒரு பக்கம். அங்கிருந்த மேசை மீது தலை சாய்த்து படுத்துவிட்டாள். ஸ்டாஃப் ரூமில் இருந்தவர்கள் அவர் அவர்கள் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தனர், வகுப்புகள் முடிந்தவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தனர். "என்ன மீரா தூங்கிட்டு இருக்க" என்று சீண்டினாள், பாக்கியம் மேடம். பாக்கியம் என்பது அவருடைய பெயர், அறிவியல் ஆசிரியை, மற்றும் கொஞ்சம் சீனியர் என்பதால் "மேடம்" பெயரோடு ஒட்டிக் கொண்டது. "சின்ன புள்ளைங்க நல்ல பிரிஸ்கா இருக்க வேணாமா ?" என்று மறுபடியும் சீண்டினாள். காரணம், விளக்கம் எல்லாம் சொல்லி அவர்களிடம் தன் நிலையை சொல்ல அவளுக்கு தோன்றவில்லை விருப்பமும் இல்லை, "ஆமாம் நான் லூசு தான்" என்று வடிவேலு பாணியில் பேச்சை முடிப்பதற்காக "ஒடம்பு சரியில்லை மேடம்" என்று சொல்லி மறுபடியும் படுத்துக்கொண்டாள். இதற்கு மேல் எதுவும் பேசாமல் பாக்கியம் மேடம் அவர் இருக்கைக்கு சென்றுவிட்டாள். மீராவிற்கு இது தான் முதல் வேலை, முதல் பள்ளி, என்னதான் பி.எட் படிக்கும் போது, ஆசிரியர் பயிற்சிக்கு சென்றிருந்தாலும், இது என்னவோ அவளுக்கு புதியதாய் இருந்தது. மீரா, தன் கண்களை லேசாக மூடி படுத்து இருந்தாலும், காது ஒரளவு திறந்தே தான் இருந்தது. பாக்கியம் மேடம் கணித ஆசிரியை கலைவாணியிடம் பேச ஆரம்பித்தாள், "என்ன மேடம், அந்த 12th லவ் ஸ்டோரி எப்படி போது ?". கலைவாணி மேடம் பதிலுக்கு, "அட போங்க மேடம் ரொம்ப தான் ஓவரா போகுது, பக்கத்துல இருக்கிற 11th கிளாஸ்ல போய் இந்த பையன் பேசிட்டு வரான். கேட்டா, அத கேட்டேன், இத கேட்டேன், மழுப்புறான். ஏதோ அந்த பொண்ணு நல்ல படிக்குது, மார்க் வாங்குது, இந்த பையனும் நல்ல படிக்குறான், விளையாடி கப் எல்லாம் ஜெயிசிட்டு வரானு இந்த கருமத்தெல்லாம் சகிச்சிக் வேண்டியதா இருக்கு". உடனே பாக்கியம் மேடம் "பையனும் பொண்ணும் கொஞ்சம் செல்வாக்கான ஃபேமிலி,மேடம் அதனாலையும் நம்ம ஸ்கூல் மேனேஜ்மென்ட் அப்படியே கண்டும்காணாமா இருக்கு. இவங்க பெத்தவங்களுக்கும் தெரியும் தான் போல" என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். மீராவின் காதிலும் இதெல்லாம் வீழ்ந்துக் கொண்டுதான் இருந்தது. இவளுக்கு ஞாபகம் இருக்கிறது, கடந்த மாதம் கடைசியில் தான் பணியில் சேர்ந்தாள். மீரா சேர்ந்த சில நாட்களில் இந்த மாணவன் தேசிய அளவில் நடந்த தடகள போட்டியில் வெற்றி பெற்றதற்காக இந்த பள்ளி இவனுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். இப்படி திறமையான மாணவனா இந்த வயதில் இப்படி காதல், என்றெல்லாம் இருக்கிறான் என்று இவளுக்கு ஆச்சரியம் ஒரு பக்கம். அதைவிட அதிர்ச்சி அவன் வகுப்பில் இருக்கும் போது, இந்த ஆசிரியர்களின் கண்டிப்பு அவனிடம் சிறிது குறைவாகவும், அவன் இல்லாத போது இவனை போன்ற ஒரு மோசமான மாணவனை பார்க்கவே முடியாது என்பது போலவும் பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த இரட்டை வேஷம் ஏன் ? என இவளுக்கு புரியவில்லை, அதை புரிந்துக்கொள்ளவும் இவள் ஆர்வம் காட்டவில்லை.
அரை தூக்கத்தில் இருந்தவளுக்கு, இவளின் பள்ளி கால நினைவுகள் மீண்டும் வந்து எட்டிப் பார்த்தன. தாழ்மையோடு இருப்பதும் தாழ்வுமனப்பான்மையோடு இருப்பதும் இரு வேறு விஷயங்கள் என்பது கூட இவளுக்கு அந்த பருவத்தில் தெரியாது. "நான் அழகானவள் இல்லை" என்று இவளுக்கு இவளாகவே நினைத்துக்கொண்டு இருப்பாள், யாரேனும் "இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க"என்று கூறினால் பதிலுக்கு நன்றி கூற வேண்டும் என்பது கூட தெரியாமல், உண்மையிலே நாம் அழகாக தான் இருக்கிறோமா என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிடுவாள். அப்படி இருக்கையில் அவளின் 11ஆம் வகுப்பில் தான் அந்த பையனை பார்த்தால், பார்த்தவுடன் உள்ளுக்குள் ஏதோ ஒரு மாற்றம், என்னவென்று இவளுக்கு சொல்ல தெரியவில்லை, எந்நேரமும் அந்த பையனின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும், அவன் சிரிப்பை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று மட்டுமே அவளுக்கு தோன்றியது. உண்மையில் அவனும் பெரிய "அழகன்" எல்லாம் இல்லை, ஒரு சாதாரண பதின் பருவ பையன் தான். இவளுக்கு மட்டும் அவன் பேரழகனாக தெரிந்தான், அவனிடம் பேச்சுக் கொடுப்பதும், அவனை பற்றி தன்னுடைய நெருங்கிய தோழியிடம் மறைமுகமாக ஏங்கி அங்கலாய்த்து கொள்வதும் தான் தினசரி வேளை. போக போக இவளுக்கு இந்த காதல்பித்து அதிகரித்து கொண்டே தான் போனது, காதல் பாடல்களில் வரும் வரிகள் எல்லாம் இவளுக்காக தான் எழுதினார்கள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால். இப்படி இருக்கையில் ஒருமுறை 12ஆம் வகுப்பு படிக்கும் போது சிறப்பு வகுப்பு நடந்தது. படிப்பதற்காக தோழிகளுடன் வகுப்பிற்கு வெளியே வந்து உட்கார்ந்தாள். இவள் வகுப்பிற்கு வெளியே உள்ள இடத்திலும் அந்த பையனும் அவன் நண்பர்களும் வகுப்பிற்கு உள்ளேயும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள், இருவருக்கும் இடையில் ஒரு ஜன்னல் வைத்த சுவர். பசங்க எல்லாரும் ஏதோ கதை பேசிக்கொண்டு இருந்தார்கள், அப்படியே பேச்சு கூட படிக்கும் சக மாணவிகளில் யார் அழகு என்று பேசிக்கொண்டு இருந்தார்கள். இவளின் ஆசை நாயகன், இவளையும் இவளின் மற்ற தோழிகளையும் எவ்வளவு கேவலமாக உருவகேலி செய்து பேச முடியுமோ அப்படி பேசிக்கொண்டு இருந்தான். இவளுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. தனக்கு பிடித்த ஒருவன் இப்படி பேசுகிறானே என்ற ஆதங்கம் நெஞ்சை அடைத்தது, எச்சில் முழுங்க முடியாதபடி தொண்டை அடைத்து கொண்டது. காதல் பித்து தெளிந்தது, இவ்வளவு மோசமான ஒருவகையான நாம் ஆசை நாயகனாக கற்பனை செய்து கொண்டிருந்தோம், என்று தன்னை தானே நொந்துக் கொண்டாள். இதில் இவள் தாழ்வுமனப்பான்மையும் சேர்ந்துக் கொண்டது, அன்றிலிருந்து தான் அழகு இல்லாதவள் என்று முடிவு செய்துகொண்டு எந்த பையனையும் பார்க்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க ஆரம்பித்துவிட்டால். கல்லூரியிலும் பெரிய தோழிகள் வட்டம் எல்லாம் இல்லை, முன்று பேர் தான் நண்பர்கள் இவர்கள் அனைவரும் கல்லூரி போவதும் வருவதும், படிப்பில் மட்டுமே கவனம் என்ற நிலையில் இருந்தார்கள். இன்று வேலைக்கும் வந்தாகிவிட்டது.
தூக்கத்தில் இருந்த எழுந்தாள் மீரா, கழிப்பறை சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தாள். வீட்டிற்கு செல்ல இன்னும் அரைமணி நேரம் உள்ளது. மனதில் ஏனோ ஒரு விவரிக்க முடியாத கோபம். எப்படி எல்லாம் இந்த பிள்ளைகள் இருக்கிறது, படிக்கிற வயதில் காதல், கத்திரிக்காய் என்று சீரழிகிறார்கள் என்று மனதுக்குள் சீறிக்கொண்டாள், அதை கோபம் என்பதை விட ஒரு நிறைவேறாத ஏக்கத்தின் வடிவம் என்று தான் கூற வேண்டும். ஒருவர் மீது இன்னொருவர் காதல் கொள்வதற்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்று இத்தனை ஆண்டுகால வரலாற்றில், இன்றுவரை யார் ஒருவராலும் வரையறுக்க முடியவில்லை, கடல் தாண்டி, கண்டம் தாண்டி வருகின்ற காதல் என ஏகப்பட்ட காதல் கதைகளை தினமும் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறோம். காதல் என்பது ஒரு மின்னல் தாக்குதல் போலத்தான் யார் மீது அந்த காதல் அம்பு யாரால் செலுத்தப்படும் என்று யாருக்கும் தெரியாது. அதேபோல் எல்லோருக்கும் காதல் என்கிற அந்த தீடீர் அம்பு(அன்பு) கிடைத்து விடுவதில்லை, சிலருக்கு கிடைத்து அதை அவர்கள் அழகாக பார்த்துக் கொள்வதும், சிலர் அதை தூக்கி எறிந்து விட்டு போவதும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.
வீட்டிற்கு வந்தாள், எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, குளித்துவிட்டு, அடுத்த நாள் பள்ளிக்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டிருந்தாள். தன்னுடைய ஆதங்கத்தை யாரிடமாவது கொட்டிவிட வேண்டும் என்ற மனநிலையில் இருந்தாள். சாப்பிடும் நேரம் வந்தது, மீரா தோசை சுட அவள் அம்மா பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார்கள். மெல்ல அவள் பள்ளியின் காதல் கதையை அம்மாவிடம் மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள். அம்மாவும் பொறுமையாக "ஊங்" கொட்டி கேட்டுக் கொண்டிருந்தாள். தன் அம்மா எப்படியும் அந்த பையனையும் பொண்ணையும் திட்டி தீர்ப்பார்கள் நம் ஆதங்கம் அடங்கும் என்ற கவனித்து கொண்டிருந்தவளுக்கு ஒரு பேரதிர்ச்சி. அம்மா அமைதியாக "என்ன இப்போ லவ் தான பண்றாங்க...என்னவோ வேற ஏதோ பெரிய தப்பு பண்ண மாறி பெருசா சொல்லிகிட்டு இருக்க" என்று கூறி அவளை வாயடைத்தாள். "இங்க பாரு லவ் பண்றதெல்லாம் தப்பே இல்ல, எங்க போட்டுருக்கு சொல்லு பாக்கலாம் லவ் பண்றதெல்லாம் தப்புன்னு. சாதி மதம் பாக்காம குழந்தைங்க மேல உண்மையான அன்பு வெச்சி இருக்குற அம்மா அப்பா, பசங்க லவ் பண்றத தடுக்க மாட்டாங்க...இன்னொனு, ஏன் ஸ்கூல் படிக்கிற வயசுல லவ் பண்ண வேணாம்னு சொல்றாங்க...நல்லது கெட்டது தெரியாது, அதே நேரம் வாழ்க்கைக்கு படிப்பு ரொம்ப முக்கியம் அது போயிடுச்சுனா அதுக்கப்புறம் எல்லாம் போயிடும். அதால தான் அந்த வயசுல படிக்க மட்டும் சொல்றாங்க. நல்லா படிச்சா அதுக்கப்புறம் பின்னாடி வர வாழ்க்கைல நல்லா இருக்கலாம், அதுக்கு தான் படிக்குற வயசுல லவ் பண்ணாதனு சொல்றாங்க. அதுமட்டும் இல்ல அந்த வயசுல தெளிவா முடிவு எடுக்க தெரியாது, ஒரு பையனோ பொண்ணோ பண்ற தப்பெல்லாம், அவங்க கண்ணுக்கு தப்பாவே தெரியாது, கெட்டு சீரழிய கூடாதுனு தான் வேணாம்னு சொல்றாங்க....ஆனா நீ சொன்ன பசங்க ரெண்டும் நல்ல படிக்குது, கப்பெல்லாம் வாங்கி இப்பவே பெத்தவங்களுக்கு பேர் வாங்கி குடுக்குதுங்க, அதுங்க பண்ற 'லவ்'வால படிப்பும் கெட்டு போகல, அந்த பிள்ளைங்க குணமும் கெட்டு போகல, தெளிவா இருக்குதுங்க பின்ன என்ன பிரச்சினை. இங்க பாரு மீரா காதல் என்னைக்குமே தப்பானது இல்ல, அது வர நேரம் அது தப்பா...ரைட்டானு முடிவு பண்ணுது. சில சமயம் சில பேருக்கு அந்த சரியான நேரம் சீக்கிரம் வரும்...சில பேருக்கு லேட்டா வரும்... சிலருக்கு வராமலே போகலாம்.... இதெல்லாம் ஏன் எப்படினு ஆராய்ச்சிலாம் பண்ணிட்டு இருக்க முடியாது".
மீராவிற்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி, உலகத்தின் எவ்வளவு பெரிய தத்துவத்தை எவ்வளவு சாதரணமாக சொல்லிவிட்டாள். சரியான நேரமும் சூழ்நிலையும் தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. அம்மா பாத்திரத்தை சுத்தம் செய்து முடிந்திருந்தால், முன்பு கூலமாக இருந்த அந்த வாஷ்பேஷன் இப்போது தெளிவாகி போயிருந்தது. அம்மா அடுத்த வேலையை பார்க்க போயிவிட்டாள். மீரா அடுத்த தோசையை சுட ஆரம்பித்தாள்.

Comments
Post a Comment