இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 3

இந்திய அரசியல் நிர்ணய சபைக்கான குரலானது M.N.ராயிடம் இருந்து தொடங்கியது. இந்தியாவை இந்திய மக்கள் தான் ஆள வேண்டும், அதற்காக தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசாங்கம் வேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக வளர்ந்து, 1938ல்  இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் நேரு " இந்தியாவை இந்தியர்கள் ஆள ஒரு அரசியலமைப்பு தேவை" என்ற‌ தீர்மானத்தை நிறைவேற்றி ஆங்கிலேய அரசுக்கு தெரியப்படுத்தினார். இந்த கோரிக்கை 1940ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது, இதை "ஆகஸ்ட் சலுகை" என்பார்கள். இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்க "கிரிப்ஸ் திட்டம்" வந்தது. தனிநாடு மற்றும் தனி அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் லீகால் முன்வைக்கப்பட்டது, இதனால் கிரிப்ஸ் திட்டத்தை நிராகரித்தார்கள். முஸ்லிம் லீக்கின் சில கோரிக்கைகளை நிறைவேற்றி "கேபினட் திட்டம்" உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கியது. இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்கள் மறைமுக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எல்லா மதத்திற்கான பிரதிநிதிகள், எல்லா சமூகங்களுகான பிரதிநிதிகள், அன்றைய‌ தேதியில் இருந்த முக்கிய புள்ளிகள் என அனைவரும் அரசியல் நிர்ணய சபையில் இருந்தார்கள், மகாத்மா காந்தியை தவிர்த்து!..

நேரு வரலாற்று சிறப்பு மிக்க "குறிக்கோள் தீர்மானங்களை" முன்மொழிய அதை எல்லோரும் சேர்ந்து தீர்மானமாக நிறைவேற்றினர். அரசியலமைப்பை உருவாக்கும் பணிக்காக பல குழுக்கள் உருவாக்கப்பட்டன, அவற்றில் எட்டுக் குழுக்கள் முக்கியமானவை. அவை 

Committees of Constituent Assembly
 

மற்ற குழுக்களை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தது அரசியலமைப்பு வரைவு குழு. இந்தக் குழு 1947 ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் Dr.B.R.Ambedkar. பல குழுக்களின்  முன்மொழிவுகளை ஏற்றுக் கொண்டு பிப்ரவரி மாதம் 1948ல் இந்திய அரசியலமைப்பின் முதல் வரைவு உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்திய மக்கள் அனைவரும் அவர்கள் கருத்துக்களை தெரிவிக்க அறிவுத்தப்பட்டது‌. பின் அவற்றை கொண்டு திருத்தப்பட்ட இரண்டாவது வரைவு அதே ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்டது.

    இந்திய அரசியலமைப்பின் கடைசி வரைவு 1948 நவம்பர் 4ஆம் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் வாசிப்பு ஐந்து நாட்களுக்கு நடைபெற்றது, அதில் பொதுவான‌ விவாதமும், நவம்பர் 15ல் இரண்டாவது வாசிப்பு தொடங்கியது அதில் ஒவ்வொரு உட்பிரிவுகளையும் படித்து அதன் மீது விவாதம் நடந்தப்பட்டன. மொத்தம் ஏழாயிரம் திருத்தங்கள் முன்மொழியப்பட்டு 2500 திருத்தங்கள் மீது விவாதம் நடந்தது. இந்த இரண்டாம் வாசிப்பு 1948 அக்டோபர் மாதம் முடிந்தது. மூன்றாம் வாசிப்பு 1949 நவம்பர் 14ல் தொடங்கியது இந்த வாசிப்பின் போது இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை அம்பேத்கர் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் 1949 நவம்பர் 26 அன்று அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றப்பட்டது. இந்த தேதி தான் இந்திய அரசியலமைப்பின் முகப்புரையிலும் அச்சிடப்பட்டு இருக்கும்.

A.I. generated image about the discussion of drafting committee members

இந்த வருடத்துடன் இந்திய அரசியலமைப்பு உருவாகி 75 ஆண்டுகள் ஆகிறது. நாளை(நவம்பர் 26 2024) இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது‌. இந்த அரசியலமைப்பை உருவாக்கும் பணியில் முதன்மையானவர் அண்ணல் அம்பேத்கர், பல முக்கியமான விவாதங்களில் பங்குபெற்று இந்திய அரசியலமைப்பை செதுக்கியதில் மிக முக்கிய பங்காற்றியவர். காலப்போக்கில் பல சிறுசிறு மாற்றங்களை அரசியலமைப்பு சந்தித்தாலும் இன்றளவும் அதன் அடிப்படை தத்துவம் மாறாமல் இயங்கிக் கொண்டிருப்பது தான் அதன் சிறப்பு. நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டியது இதுதான் "எந்த நாளிலும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை தத்துவத்தை மாற்றும் அல்லது சிதைக்கும் செயலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்".
சில முக்கியமான சட்டங்கள், இயற்றப்பட்ட உடனே அமலுக்கு வந்ததுவிட்டன. மற்ற அனைத்து சட்டங்களும் ஜனவரி 26 1950 அன்று தான் அமலுக்கு வந்தது. இந்த நாளை தேர்ந்தெடுக்கப்பட்டதற்க்கான காரணம். இந்திய தேசிய காங்கிரஸ் 1930 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற மாநாட்டில் "முழுமையான சுதந்திரம்"(பூர்ண சுவராஜ்) கொண்டாடப்பட்ட நாளாகும். இந்த நாளை தான் நாம்  குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.


இந்திய அரசியல் நிர்ணய சபை அரசியலமைப்பை உருவாக்கும் பணியோடு சில பணிகளை மேற்கொண்டார்கள், அவை

  •  இந்தியா காமன்வெல்த் குழுவில்  உறுப்பினர் என்று‌ அங்கீகரித்தது.
  • இந்தியாவிற்கான தேசிய கொடி(மூவர்ண கொடி)1947 ஜுலை மாதம் 22 அன்றும் தேசிய கீதம்(ஜன கண மன) மற்றும் தேசிய பாடல்(வந்தே மாதரம் ) 1950 ஜனவரி மாதம் 24ஆம் தேதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முதல் குடியரசு தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 60 நாடுகளின் அரசியலமைப்பை படித்து அதில் உள்ள சிறப்பானவற்றை கொண்டு, மொத்தம் இரண்டு ஆண்டு பதினோரு மாதம் 18 நாட்களில் 11 அமர்வுகள் கூட்டப்பட்டு விவாதங்கள் நடத்தி இந்திய அரசியலமைப்பை உருவாக்கினார்கள். மொத்தமாக 64 லட்சம் செலவானது. எஸ்.என்.முகர்ஜி தலைமை வரைவாளராகவும், பிரேம் பேகாரி நரைன் ரைசாதா அவரின் அழகான கையெழுத்தில் எழுத, அதை நந்த லால் போஸும், ராம் மனோகர் சினன்ஹாவும் அலங்கரிக்க இந்திய அரசியலமைப்பு புத்தகம் உருவானது.

Madhavrao, Sayyad sadullah, BR Ambedkar, Alladi Krishnaswami Iyer, Sir Benegal, Narsingh Rao. Standing from left – S.N. Mukherjee, Jugal Kishor Khanna & Kewal Krishnan.


இந்திய அரசியல் நிர்ணய சபையின் மீதான விமர்சனங்கள்: 

     இந்திய அரசியல் நிர்ணய சபையின் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான மக்கள் பிரதிநிதிகள் இல்லை. அதனால் அவர்கள் எப்படி மக்களின் குரலாக இருக்கமுடியும் என்ற விமர்சனம் எழுந்தது.  இந்திய அரசியல் நிர்ணய சபை சுதந்திரமான இறையாண்மை கொண்ட அமைப்பு கிடையாது. அது ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டு, அவர்களின் மேற்பார்வையில் தான் அமர்வுகளை நிகழ்த்தியது.இந்திய அரசியல் நிர்ணய சபை மிக அதிகப்படியான நேரத்தை எடுத்துக் கொண்டு அரசியலமைப்பை உருவாக்குகிறது, என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்திய அரசியல் நிர்ணய சபை காங்கிரஸ்காரர்களின் ஆதிக்கம் மிகுந்ததாக இருக்கிறது என்ற விமர்சனமும் எழுந்தது. அதே போல் வழக்கறிஞர்களும் அரசியல் ஆளுமைகள் மட்டுமே இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக இருந்தனர். இதனால் தான் அரசியலமைப்பு எளிமையாக இல்லாமல் மிக கடினமான மொழி மற்றும் நடையில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இந்திய அரசியல் நிர்ணய சபை இந்துக்களின் ஆதிக்கம் நிறைந்த ஒன்றாக இருந்தது என்ற விமர்சனமும் எழுந்தது.

இந்த விமர்சனங்கள் மீதான என் பார்வை:

        இந்த விமர்சனங்கள் எல்லாம் உண்மை எனில் அவை இன்றைய சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆங்கிலேய அரசிடம் இருந்து அதிகார மாற்றம் நிகழும் போது அன்றைய காலகட்டத்தில் தேர்தல் மூலம் அரசியல் நிர்ணய சபையை உருவாக்குவது என்ற மிக கடினமான காரியம், பல நடைமுறை சிக்கல்கள் நிறைந்தது.அன்றைய காலகட்டத்தில் மிக பிரபலமான இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ் தான், சுதந்திரத்திற்காக போராடிய பல தலைவர்கள் காங்கிரஸ்காரர்கள் தான், பெரும்பான்மையான கட்சி அரசியலமைப்பு உருவாக்கத்தில் இடம்பெறாமல் , வேறு யார் இடம்‌பெற முடியும்.  மிக நீண்ட நெடிய விவாதங்கள் நடத்தி அரசியலமைப்பை உருவாக்கிய தால் தான் இன்றளவும் அரசியலமைப்பு பெரிய மாற்றங்கள் இல்லாமல் செயல்படுகிறது. சுதந்திர போராட்ட காலத்தில் அரசியலில் இருந்த பெரும்பாலானவர்கள் வழக்கறிஞர்களே காந்தி, மோதிலால் நேரு, ராஜாஜி, அம்பேத்கர், பாலகங்காதர திலக், சித்தரஞ்சன் தாஸ், படேல் இன்னும் பல. இவர்களை போன்றோர்கள் இல்லாமல் எப்படி அரசியலமைப்பை உருவாக்க முடியும்.


தலைப்பை விட்டு விலகிப் போனாலும், இதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். இதை விட வேறு எந்த இடமும்‌பொருத்தமாக இருக்காது. ஆங்கிலேய ஆட்சியின் விளைவாக தான் இந்திய மக்களிடையே இருந்த மத பிளவுவாதம் மிக பெரிய அளவுக்கு சென்றது. அவர்களின் அரசியல் லாபத்திற்காக மத பிரிவினையை ஏற்படுத்தி ஆண்டார்கள். இதன் விளைவாக உருவானது தான் முஸ்லிம் லீக். முஸ்லிம் லீக் கட்சியில் இருப்பவர்கள் தனிநாடு கோரினார்கள் இந்திய அரசியல் நிர்ணய சபையில் பல இடையூறுகளை உருவாக்கினார்கள், கடைசியில் அவர்கள் வெளியேறவிட்டால் நாங்கள் வெளியேறுவோம் என்று காங்கிரஸ் நிபந்தனை விதிக்க, முஸ்லிம் லீக் கட்சியினர் இந்திய அரசியல் நிர்ணய சபைபை புறக்கணித்து வெளியேறினர். அவர்களுக்கு என்று ஒரு தனி அரசியல் நிர்ணய சபையின் மூலம் அவர்களின் அரசியலமைப்பை உருவாக்கினார்கள். மதம் சார்ந்து உருவான எந்த ஒரு நாடும் நிம்மதியாக வாழ்ந்து செழித்தார்கள் என்று வரலாற்றுப் பக்கங்கள் கூறுவதில்லை, மாறாக மதகலவரம், இனக்கலவரம், பொருளாதார வளர்ச்சியின்மை, பிற்போக்குதனம், பெண்ணடிமைத்தனம் என சகலமும் தலைவிரித்தாடும்‌. இன்றளவும் நடக்கூடிய இஸ்ரேல் பாலஸ்தீனம் போர், பாகிஸ்தான் பிரச்சினை, சிரியா போர், என உலகெங்கிலும் மதத்தின் பெயரால் மனித சமூகம் மாண்டு போகிறது. யாரோ இரண்டு கூட்டத்தின் சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக அப்பாவி மக்கள் தான் பலியாகிறார்கள். சில காலாமாக இந்தியாவிலும் மதபிளவுவாதம் எட்டிப் பார்க்கிறது அதை நாம் எப்போதும் எச்சரிக்கையோடு அணுக வேண்டும். 

சர்வ வல்லமை கொண்ட கடவுளையும் மதத்தையும் காப்பாற்ற எந்த மனிதனையும்‌ கடவுள்‌ படைக்கவில்லை. மதம் என்பது தனிப்பட்ட ஒழுக்கம் அது ஒருநபர் கருவி, அதை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என நினைப்பது முட்டாள்தனம். மதத்தை காப்பாற்றுகிறேன் என்று வரும் எவரையும் நம்பாதீர்கள் அவர்களுக்கெல்லாம் எப்போதுமே ஒரு உள்நோக்கம் உண்டு. பல நதிகள் கடலில் கலப்பது போல தான் மதமும், அவரவர்களுக்கு அவர்கள் கடவுள் சிறந்தது. மதத்தை உங்கள் பூஜை அறையோடு நிறுத்திவிடுங்கள். மதத்தையும் அரசியலையும் ஒன்றாக்க நினைத்தால் அது எப்பேர்ப்பட்ட நாடாக இருந்தாலும் அழிவு நிச்சயம்.

நம் அரசியலமைப்புக்கு என்று சில தனித்துவங்கள் உள்ளன அவை எல்லாம் என்னவென்று‌ அடுத்த பகுதியில் பார்ப்போம்....

குறிப்புகள் தொடரும்....

Comments

Popular posts from this blog

சரியான நேரம்

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 9

காகித அன்பு