இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் -2





    கடந்த பகுதியில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து என்று கூறினேன் அல்லவா!. அது தான் "பெரும் கலகம்" அல்லது சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும். இதை இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று சாவர்க்கர் குறிப்பிடுவார். ஆனால் இது இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று சொல்ல முடியாது, காரணம் இந்த கலகம் மக்களின் மதம், பொருளாதாரம், மற்றும் சில தனிப்பட்ட காரணங்களால் உருவான கலகம், இதை வழிநடத்தியவர்கள் அந்த அந்த ஊரை சார்ந்த அரசர்களும் குறுநில மன்னர்களும் தான். ஒரு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு மற்றொர் மாகாண மக்களை பற்றிய கவலை கிடையாது. மக்கள் சாதியகவும், மதமாகவும், இனமாகவும் பிரிந்து இருந்தார்கள். தீண்டாமையும் மூட பழக்க வழக்கங்கள் மலிந்து காணப்பட்டன. இந்த பிரிவினைகளால் தான் அன்றைய கலகம் தோற்று போகவும் காரணமாய் இருந்தது.

இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். இந்த சிப்பாய் கலகம் தான், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தியா நேரடியாக ஆங்கிலேய அரசு குடும்பத்தின் ஆட்சிக்கு கீழ் சென்றது.


கேனிங்க்

இந்திய அரசு சட்டம் 1858
    இந்த சட்டம் தலைமை ஆளுநர் என்ற பதவிக்கு பதிலாக வைஸ்ராய் என்ற பதவியை நிறுவியது. வைஸ்ராய்(viceroy) என்பதன் பொருள் அரசரின் நேரடி பிரதிநிதி அல்லது அரச பிரதிநிதி. கேனிங்க் தான் இந்தியாவின் முதல் அரச பிரதிநிதி. கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இயக்குநர்கள் குழு என்ற இரண்டு அமைப்பையும் ஆங்கிலேய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தியாவை நிர்வாகம் செய்வதற்கான முழு அதிகாரமும் அரசு செயலாளர் (secretary of state) என்ற புதிய பதவிக்கு வழங்கப்பட்டது. இந்த அரசு செயலாளர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் உறுப்பினர், பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு கட்டுப்பட்டவர். அரசு செயலாளாருக்கு உதவ 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தியாவை ஆள இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்பதை ஆங்கிலேய அரசாங்கம் புரிந்துக் கொண்டது. அதன் அடிப்படையில் ஆட்சி நிர்வாகத்தில் இந்தியர்களை பங்கெடுக்க புதிதாக இந்திய ஆட்சி மன்ற குழு சட்டம்(Indian Councils Acts) கொண்டுவந்தனர். இந்த சட்டம் அரசியல் மற்றும் அரசியலமைப்பு வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.


இந்திய ஆட்சி மன்ற குழு சட்டம் 1861(Indian councils acts 1861)
    சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் இந்தியர்கள் பங்கு பெற இச்சட்டம் அதிகாரம் அளித்தது. அரசு பிரநிதி(viceroy) சட்டம் இயற்றும் குழுவில் இந்தியர்களை அதிகாரப்பூர்வமற்ற(non official) உறுப்பினர்களாக நியமிக்கலாம். முதன்முதலில் சட்டமியற்றும் குழுவில் நியமிக்கப்பட்ட இந்தியர்கள் - பெனாரஸின் ராஜா, பாட்டியாலாவின் மகாராஜா மற்றும் தினகர் ராவ். அதிகார பரவலாக்கத்தின் முன்னெடுப்பாக இச்சட்டம் அமைந்தது. மெட்ராஸ் மற்றும் பாம்பே மாகாணங்களின் சட்டம் இயற்றும் அதிகாரம் திருப்பி அளிக்கப்பட்டன, புதிதாக சட்டம் இயற்றும் மன்றங்களை முறையே 1862- வங்காளம், 1886- வடமேற்கு பிராந்தியம் ,1897- பஞ்சாப். கேனிங்க் நிர்வாகத்தில் இலாகா முறை அல்லது துறை அறிமுகப்படுத்தப்பட்டது ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துறைகள் ஒதுக்கப்பட்டன. அரசு பிரதிநிதிக்கு அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது, இந்த அவசர சட்டத்தின் வாழ்நாள் ஆறு மாதங்கள்.


இந்திய ஆட்சி மன்ற குழு சட்டம் 1892(Indian councils acts 1892)
    இந்த சட்டத்தில் மத்திய மற்றும் மாகாண சட்டமன்றங்களில் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள். சட்டமன்றங்களில் பட்ஜெட் மீது கேள்வி கேட்கலாம் என்ற உரிமையை கொண்டு வந்தார்கள். மத்திய சட்டமன்றங்களில் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களை மாகாண சட்டமன்றங்கள் மற்றும் வங்காள வர்த்தக சபையின் பரிந்துரையின் பெயரில் வைஸ்ராயால் நியமிக்கப்பட்டனர். மாகாண சட்டமன்றங்களில் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களை மாவட்ட வாரியங்கள், நகராட்சி, பல்கலைக்கழகம், வர்த்தக சங்கங்கள், ஜமீன்தார்கள் மற்றும் சபைகளின் பரிந்துரையின் பெயரில் வைஸ்ராயால் நியமிக்கப்பட்டனர்.


இந்திய ஆட்சி மன்ற குழு சட்டம் 1909(Indian councils acts 1909)


மின்டோ- மார்லி


    இந்த சட்டத்தை மின்டோ- மார்லி சீர்த்திருத்தங்கள் என்றும் குறிப்பிடப்படும். மார்லி - அரசு செயலாளர், மின்டோ- அரச பிரதிநிதி. இந்த சட்டம் சட்டமன்றங்களில் மேலும் அதிகமாக உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. சட்டமன்றங்களில் கூடுதலாக கேள்விகள் கேட்கும் உரிமை அளிக்கப்பட்டன. ஆளுநர் மற்றும் அரசு பிரதிநிதியின் நிர்வாக குழுவில் முதல்முறையாக இந்தியர்களை அனுமதித்தனர். வைஸ்ராயின் நிர்வாக குழுவில் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட நபர் சத்தியேந்திர பிராசத் சின்ஹா. மின்டோ மார்லி சீர்த்திருத்தங்கள் மூலம் தேர்தலில் வகுப்புவாத பிரிவினையை(concept of communal separate electorate)கொண்டு வந்தனர். தேர்தலில் வகுப்புவாத பிரிவினை என்பது ஒரு தொகுதியை ஒரு குறிப்பிட்ட மதத்திற்காவோ, சாதிக்காவோ அல்லது இனக்குழுக்காக ஒதுக்கப்படும். அங்கு அந்த மதத்தை அல்லது இனத்தைச் சேர்ந்தவர் தேர்தலில் நிற்பார் அவருக்காக அந்த மதம் அல்லது இனம் சார்ந்தவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். பிற மதத்தை சார்ந்தவர்கள் வாக்களிக்க முடியாது. இந்த நடைமுறை சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்குகிறோம் என்ற போர்வையில் நேரடி வகுப்புவாத பிரிவினையை ஊக்குவித்தனர். மின்டோவை வகுப்புவாத பிரிவினை தொகுதியின் தந்தை என்று அழைப்பார்கள்.


மாண்டேக் - செம்ஸ்ஃபோர்ட்


இந்திய அரசு சட்டம் 1919

    இந்த சட்டத்தை மாண்டேக் - செம்ஸ்ஃபோர்ட் சீர்திருத்தங்கள் என்றும் அழைக்கப்படும். (மாண்டேக் - அரசு செயலாளர் செம்ஸ்ஃபோர்ட் - வைஸ்ராய்). இந்த சட்டத்தின் மூலம் அதிகார பகிர்வு ஏற்ப்பட்டது, மத்திய துறைகள்(subjects) மற்றும் மாகாண துறைகள் என்ற துறைகள் உருவாக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டன. அந்தந்த துறை சார்ந்த விஷயங்களுக்கு அவர் அவர்கள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம். மாகாண துறைகள், ஒதுக்கப்பட்ட துறை மற்றும் மாற்றப்பட்ட துறை என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. ஆளுநரின் சட்டமன்ற குழு மாற்றப்பட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளையும் ஆளுநரின் நிர்வாகக் குழு ஒதுக்கப்பட்ட துறை சார்ந்த நடவடிக்கைகளையும் கவனித்துக் கொள்ளும். முதல்முறையாக இரு அவை முறை அறிமுகப்படுத்தப்பட்டது, இந்திய சட்டம் இயற்றும் குழுவுக்கு பதிலாக இப்போது மேலவை மற்றும் கீழவை என்ற நடைமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இந்த இரு அவைகளுக்கான உறுப்பினர்களை நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்தனர். மத்திய மற்றும் மாகாணங்களுக்கு என்று தனித்தனியாக பட்ஜெட் இயற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொகுதிகளுக்கான வகுப்புவாத பிரிவினை இஸ்லாமியர்களோடு பிற சிறுபான்மையினருக்கும் அளிக்கப்பட்டது. தேர்தலில் வாக்களிக்கும் உரிமை படிப்பு, சொத்து மற்றும் வரி செலுத்தும் சக்தி இவையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது.


சைமன் குழு :



    பெரும் கலகம் நடந்த பிறகு கொண்டு வரப்பட்ட சட்டங்களை சூழ்நிலைக்கு ஏற்றார் போல் பத்தாண்டுக்கு ஒரு முறை திருத்திக் கொண்டே வந்தார்கள். இந்திய அரசு சட்டம் 1919 ஏற்படுத்திய தாக்கங்களை ஆய்வு செய்ய, 1928ஆம் ஆண்டு ஏழு ஆங்கிலேயர்கள் கொண்ட குழு ஜான் சைமன் தலைமையில் அமைக்கப்பட்டு இந்தியா வந்தது. இந்தியாவை பற்றிய ஆய்வுக் குழுவில் ஒரு இந்தியரை கூட நியமிக்காதது இந்தியர்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. சைமன் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டாங்கள் நடைபெற்றது. இந்த போராட்டாங்களுக்கு உடன்பாடு ஏற்படுவதற்காக மூன்று வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது. இதில் கூறப்பட்ட கோரிக்கைகளை இந்திய அரசு சட்டம் 1935ல் நிறைவேற்றப்பட்டன.




    1932ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசின் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு தொகுதி வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை சிறுபான்மையினருக்கு மட்டும் அல்லாமல் தாழ்த்தப்பட்டோருக்கும் கொண்டு வந்தார். ஹிந்து மதத்தில் உள்ளவர்களுக்குள் வர்ண வேறுபாடுகள் இருந்தாலும், அவர்கள் எல்லோரும் ஒரே மதம் தான் அவர்களுக்கு வகுப்புவாத பிரதிநிதித்துவம் அளிக்கக் கூடாது என்று பூனா எராவாடா சிறையில் காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அம்பேத்கர் மறுப்பக்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க இந்த முறை வேண்டும் என்று ஆதரித்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் கையில் அதிகாரம் செல்லும் போதுதான் உண்மையான சமமான சமுதாயம் உருவாகும் என்று நம்பினார். காந்தியோ மறுப்புறம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாக வகுப்புவாத தொகுதிகள் அளித்தால் அது அவர்களை பொது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திவிடும் என்று நம்பினார். காந்தியும் அம்பேத்கரும் தீண்டாமை ஒழிய வேண்டும் என்ற ஒருமித்த கருத்தை கொண்டு இருந்தனர். காந்தி இந்து மதமாக எல்லோரும் சமமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், அம்பேத்கரோ இந்த தீண்டாமை மற்றும் ஏற்றத்தாழ்வுக்கான அடிப்படையே இந்து மதம் கொண்டுள்ள கொள்கைகள் தான் என்று கூறினார். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் காந்தி தீண்டாமையை எதிர்த்தார் எல்லோரும் சமம் என்று கூறினார் ஆனால் வர்ண கோட்பாட்டை ஆதரித்தார், இந்து மதத்தை சீர்திருத்த முயலாமல் அதை பின்பற்றியவர்களை சீர்திருத்த முயன்றார். அம்பேத்கரும் தீண்டாமையை எதிர்த்தார், எல்லோரும் சமம் என்று சொன்னார், ஆனால் வர்ண கோட்பாட்டை நிராகரித்தார், இந்து மதத்தையே சீர்திருத்த முயன்றார். இந்த நிலையில் தான் குட்டி அரசியலமைப்பு என்று சொல்லக் கூடிய இந்திய அரசு சட்டம் 1935 கொண்டு வரப்பட்டன.


இந்திய அரசு சட்டம் 1935


    மிக நீண்ட நெடிய கோப்பு, இந்த சட்டம், இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டே இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய மாகாணங்களின் கூட்டமைப்பை(Federation of India) இந்த சட்டம் உருவாக்கியது. மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொது பட்டியல் உருவாக்கப்பட்டது. 1937ஆம் ஆண்டு மாகாணங்களுக்கு தனித்தியங்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் அது திரும்ப பெறப்பட்டது. மத்தியில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்தமுள்ள 11 மாகாணங்களில் ஆறு மாகாணத்தில் பல கட்டுப்பாடுகளுடன் இரு அவை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தனி தொகுதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய ஆட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு அரசு செயலாளருக்கு குழு ஏற்படுத்தப்பட்டது. வாக்களிக்கும் உரிமை மொத்த மக்கள் தொகையில் 10% பேருக்கு வழங்கப்பட்டது. மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையமும் மாகாண குடிமைப் பணி தேர்வாணையமும் உருவாக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் மாதிரியான கூட்டாட்சி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்களுக்கு என்று தனிநாடு வேண்டும் என்று ஜின்னா கோரிக்கை வைக்க, அதற்காக மௌண்ட் பேட்டன் திட்டம் தீட்ட, உடன்பாடு எட்டபட்டு இந்தியாவின் இரண்டு (சிந்து மற்றும் வங்காளம்) பகுதியை பாகிஸ்தானாக பிரித்தார்கள். வரலாற்றில் மிக குரூரமான நிகழ்வு இந்த பிரிவினை பார்க்கப்படுகிறது. பிரிந்த நாட்டின் இரு பக்கமும் மதத்தின் பெயரால் அங்குள்ள உள்ள சிறுபான்மையினர் பல பேர் கொல்லப்பட்டனர். இந்து முஸ்லிம் என்ற இரு மதத்தின் பெண்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்கள். மதத்தால் மதம் பிடித்து மனிதநேய மற்று பல பேரை கொன்று குவித்தார்கள். தோராயமாக 10 முதல் 20 இலட்சம் பேர் இந்த கலவரத்தில் இருந்திருப்பார்கள். இந்த பிரிவினைக்கு பின் உள்ள அரசியல் மற்றும் வகுப்புவாதத்தின் வேர்கள் மிக ஆழமானவை அதை இங்கு பொறுத்த இயலாது. வருங்கால பதிவில் அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இதன் பிறகு பல போராட்டங்கள் பல தியாகங்கள் கடைசியாக சுதந்திரம் கிடைத்தது. நிலையான ஆட்சி அமைய, ஒரு சிறப்பான அரசியலமைப்பு உருவாக்க சிறிது காலம் தேவைபபட்டது. பிரிவினையை சுமுகமாக நடத்த கொண்டுவரப்பட்டது தான் இந்திய சுதந்திர சட்டம் 1947.


இந்திய சுதந்திர சட்டம் 1947 :


ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னாவுடன் லூயிஸ் மவுண்ட்பேட்டன்


    ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவை இந்தியா மற்றும் பாகிஸ்தான்(சிந்து மற்றும் வங்காளம்) என இரு தனி நிலப்பரப்பாக பிரித்தது, அரச பிரதிநிதி, தலைமை ஆளுநர் முதலிய பதவிகள் ஒழிக்கப்பட்டன. இரு நாடுகளின் அரசியல் நிர்ணய சபைக்கு(constituent assembly) தங்கள் நாட்டின் அரசியலமைப்பை இயற்றிக் கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் சமஸ்தானங்களோடு இயற்றிய ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. சமஸ்தானங்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானோடு இணையலாம் அல்லது சுதந்திரமாக இருக்கலாம் என்று அனுமதி அளித்தது. புதிய அரசியலமைப்பு உருவாகும் வரை இந்திய அரசு சட்டம் 1935 பின்பற்றபடும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து விதமான அரசியல் மற்றும் நிர்வாகம் செயல்பாடுகளில் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கம் விலகியது. சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் மௌண்ட் பேட்டன், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அரசியல் நிர்ணய சபை 1946ல் உருவாக்கப்பட்டு இந்தியாவின் முதல் பாராளுமன்றம் ஆனது. 

  • ஜவஹர்லால் நேரு : இந்தியாவின் முதல் பிரதமர் 
  • சர்தார் பல்லப் பாய் படேல் : இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும்     உள்துறை அமைச்சர்
  • ராஜேந்திர பிரசாத் : உணவு மற்றும் விவசாயத் துறை அமைச்சர்
  • கூவர்ஜி ஹோர்முஸ்ஜி பாபா : வர்த்தக அமைச்சர்
  • பாபுஜி ஜக்ஜீவன் ராம் : தொழிலாளர் அமைச்சர்
  • சர்தார் பல்தேவ் சிங் : பாதுகாப்பு அமைச்சர்  
  • மெளலானா அபுல் கலாம் ஆசாத்: கல்வி
  • டாக்டர் ஜான் மதய்: இரயில் போக்குவரத்து துறை
  • டாக்டர் B.R.அம்பேத்கார்: சட்டம்

    சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு இருந்தது.....அடுத்த பதிவில் அந்த பணி ஊடே சென்று பார்ப்போம்.....





                                                                                                                    குறிப்புகள் தொடரும் ............. 

Comments

Popular posts from this blog

சரியான நேரம்

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 9

காகித அன்பு