இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 8
நாம் அனைவரும் யார்? இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளித்துவிட்டால் நீங்கள் ஒரு வட்டத்துக்குள் சுருங்கி விட்டீர்கள் என்றே அர்த்தம். அறிவியலின் பார்வையில் நாம் மனிதர்கள் ஆனால் மனிதர்களின் பார்வையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர், தமிழர், இந்த மதத்தவர், இந்த சாதியை சேர்ந்தவர் என வகை பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. முகப்புரை "இந்திய மக்களாகிய நாம்" என்று நம் அனைவரையும் இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வருகிறது. நாம் இந்தியர்கள் தான என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை கூறுகிறது.
முதலில் ஒரு நாட்டில் வாழும் மக்களை அந்நாட்டின் குடிமக்கள் என அடையாளப்படுத்த வேண்டிய தேவை ஏன் உருவானது? ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டத்திட்டமும், அந்நாட்டு மக்களுக்கான சலுகைகளும் உண்டு. அது அந்நாட்டின் குடிமக்களுக்காக மட்டுமே வழங்கப்படும் உரிமைகள், அதை மற்றவர் அனுபவிக்க முடியாது. உதாரணமாக இந்திய அரசியலமைப்பு இந்தியர்களுக்கு என்று சில சிறப்பு உரிமைகளை வழங்குகிறது. அவை சட்டப்பிரிவு 15(பாகுபாடு இல்லாமை), சட்டப்பிரிவு16(சமவாய்ப்பு), சட்டப்பிரிவு19(கருத்து சுதந்திரம்), சட்டப்பிரிவு29,சட்டப்பிரிவு30(பண்பாடு மற்றும் கல்வி கற்கும் உரிமை), தேர்தலில் வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை, அரசு பதவிகளில் பதவி வகிக்கும் உரிமை போன்றவைகள். இந்திய அரசியலமைப்பு பெரிய அளவில் மிக விரிவாக யார் இந்தியர்கள் என்ற வரையறையை குறிப்பிடவில்லை. நாடாளுமன்றம் இந்த விஷயத்தில் முடிவெடுக்க, சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்ற அதிகாரத்தை மட்டுமே வழங்குகிறது. இதனால் யார் யார் எல்லாம் இந்தியர்கள் என்பதற்கு நாடாளுமன்றம் 1955ல் குடியுரிமை சட்டத்தை இயற்றியது. அதன் பிறகு முறையே 1957,1960,1985,1986,1992,2003,2005,2015 என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. கடைசியாக குடியுரிமை திருத்த சட்டம் 2019ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2024ல் சட்டமானது.
இந்திய அரசியலமைப்பு இந்திய குடிமக்கள் யார் என்று நான்கு வகையாக விவரிக்கிறது.
சட்டப்பிரிவு 5: அரசமைப்பின் தொடக்கநிலையில் குடிமை:
இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில், அதாவது 26 ஜனவரி 1950ல் இந்திய ஆட்சிநிலவரையில் தம் நிலையான வாழ்விடத்தைக் கொண்டிருப்பதுடன்
(அ) தாம் இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்தவராகவும், அல்லது
(ஆ)இந்திய ஆட்சிநிலவரையில் பிறந்தவரை, தம் பெற்றோரில் ஒருவராகக் கொண்டவராகவும், அல்லது
(இ)அரசியலைமைப்பின் தொடக்கநிலைக்கு முன்பு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல், அதாவது 1945ல் இருந்து, இந்திய ஆட்சிநிலவரையில் தாம் வழக்கமாகக் குடியிருந்து வருபவராகவும் உள்ள ஒவ்வொருவரும் இந்தியக் குடிமகன் ஆவார்.
சட்டப்பிரிவு 6: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்தசிலரின் குடிமை உரிமைகள்:
5ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், பாகிஸ்தானில் இப்போது உள்ளடங்கியுள்ள ஆட்சிநிலவரையிலிருந்து இந்திய ஆட்சிநிலவரைக்குக் குடிபெயர்ந்துள்ள ஒருவர்
(அ)
தாமோ, தம் பெற்றோரில் ஒருவரோ தம் பாட்டன் பாட்டியில் ஒருவரோ இந்திய அரசுச் சட்டம், 1935இல் வரையறுக்கப்பட்ட இந்தியாவில்(பிரிக்கபடாத இந்தியாவில்)பிறந்தவர் என்பதுடன்,
(ஆ)
I. அத்தகையவர், 1948 ஜூலை 19ஆம் நாளுக்கு முன்பு குடிபெயர்ந்து இந்திய ஆட்சிநிலவரையில் வழக்கமாகக் குடியிருந்து வருபவராக இருப்பின், அல்லது
II. அத்தகையவர், 1948 ஜூலை 19 அன்றோ அல்லது அதற்குப் பின்போ அவ்வாறு குடிபெயர்ந்து இந்தியக் குடிமகனாகத் தம்மைப் பதிவுசெய்து கொண்டால் அவர், இந்த அரசமைப்பின் தொடக்கநிலையில் இருந்து இந்தியக் குடிமகன் எனக் ஏற்றுக்கொள்ளப்பெறுவார். அப்படி பதிவுசெய்ய விண்ணப்பிக்கும் ஒருவர், தாம் விண்ணப்பித்த தேதிக்கு உடன்முன்பு குறைந்தது ஆறு மாதங்களேனும் இந்திய ஆட்சிநிலவரையில் குடியிருந்தவராக இருந்தாலன்றி, அவரை அவ்வாறு பதிவு செய்தல் செல்லுபடி ஆகாது.
சட்டப்பிரிவு 7: பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்தசிலரின் குடிமை உரிமைகள்:
5,6 ஆகிய உறுப்புகளில் எது எவ்வாறிருப்பினும், இந்திய ஆட்சிநிலவரையிலிருந்து, தற்போதைய பாகிஸ்தானில் உள்ளடங்கியுள்ள ஆட்சிநிலவரைக்கு, 1947 மார்ச் 1ஆம் நாளுக்குப் பின்பு குடிபெயர்ந்த ஒருவரை இந்தியக் குடிமகன் எனக் கொள்ளுதல் ஆகாது.
தற்போதயை பாகிஸ்தானில் இருந்து சட்டம்பூர்வமாக மறுகுடியமர்வுக்காக அல்லது நிலையாக வாழ்வதற்காக இந்தியாவிற்கு திரும்பும் ஒவ்வொருவரும், 6ஆம் சட்டப்பிரிவின் (ஆ) கூறின் அடிப்படையில், 1948 ஜூ லை 19ஆம் நாளுக்குப் பின்பு இந்திய ஆட்சிநிலவரைக்குக் குடிபெயர்ந்தவர் என கருத்தப்படுவார். 6ஆம் சட்டப்பிரிவின் (ஆ)வை பின்பற்றி பதிவு செய்து மற்றும் அந்த சட்டபிரிவின் விதிகளை ஒருவர் பூர்த்திசெய்து இந்திய குடிமகனாகலாம்.
சட்டப்பிரிவு 8:இந்தியாவுக்கு வெளியே குடியிருந்து வரும் குறித்தசில இந்திய வம்சாவளியினரின் குடிமை உாிமைகள்:
5ஆம் உறுப்பில் எது எவ்வாறிருப்பினும், தாமோ தம் பெற்றோாில் ஒருவரோ தம் பாட்டன் பாட்டியாில் ஒருவரோ இந்திய அரசுச் சட்டம், 1935 இல் வரையறுக்கப்பட்ட இந்தியாவில் (பிரிக்கப்படாத இந்தியா) பிறந்திருந்து, அவ்வாறு வரையறுக்கப்பட்ட இந்தியாவுக்கு வெளியேயுள்ள நாடு எதிலும் வழக்கமாகக் குடியிருந்துவருகின்ற எவரும், இந்தியக் குடிமகன் எனப் பதிவுசெய்வதற்காகத் தாம் அப்போதைக்குக் குடியிருந்துவரும் நாட்டிலுள்ள இந்தியா அரசுத் தூதுவரிடம் பதிவுசெய்து அவர் இந்திய குடிமகனாகலாம்.
மேலே கூறியதை எளிதாக கூற வேண்டும் என்றால்
1. இந்தியாவில் தலைமுறையாக வாழ்ந்து வருபவர்கள்.
2. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள்
3. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து மறுபடியும் இந்தியா வந்தவர்கள்
4. வெளிநாட்டில் வாழும் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆகியோர்கள் இந்திய குடிமக்கள் ஆக இந்திய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
சட்டப்பிரிவு 9: ஓர் அயல்நாட்டு அரசின் குடிமையினைத் தாமே விருப்பட்டுப் பெற்றவர்கள் இந்திய குடிமக்கள் இல்லை:
யாராக இருப்பினும், ஓர் அயல்நாட்டு அரசின் குடிமையினைத் தாமே விருப்பட்டுப் பெற்றிருப்பாராயின், அவர் இந்தியக் குடிமகன் எனக் கொள்ளப்பெறுவதில்லை. காரணம் இந்திய அரசியலமைப்பு ஒற்றைக் குடியுரிமையை மட்டுமே வழங்குகிறது
சட்டப்பிரிவு 10: குடிமை உாிமைகள் தொடர்ந்திருத்தல்
மேலே உள்ள அத்தனை சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் இந்தியக் குடிமகனாக இருக்கின்ற அல்லது இருப்பதாகக் கொள்ளப்பெறுகின்ற ஒவ்வொருவரும், நாடாளுமன்றம் இயற்றும் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு, தொடர்ந்து அத்தகைய குடிமகனாக இருந்துவருவார்.
சட்டப்பிரிவு 11: நாடாளுமன்றம் சட்டத்தினால் குடிமை உாிமையை ஒழுங்குபடுத்துதல்:
மேலே குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவுகள் மற்றும் குடியுரிமை தொடர்பான அனைத்து விஷயங்களில் முடிவெடுக்க மற்றும் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
இந்திய குடியுரிமையை (Citizenship) பெறும் முறைகள் -
குடியுரிமை சட்டம் 1955 அடிப்படையில் (Citizenship Act, 1955) இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான வழிகளை வரையறுக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் ஐந்து முக்கியமான முறைகள் உள்ளன:
பிறப்பின் மூலம் (By Birth):
- 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூன் 30 வரை: இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடியுரிமை பெறுகிறார்கள்,அவர்களின் பெற்றோர் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தியாவில் பிறந்த அவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
- 1987 ஜூலை 1 முதல் 2004 டிசம்பர் 3 வரை: இந்த காலத்தில் பிறந்தவர்கள், அவர்களின் பெற்றோரில் ஒருவராவது இந்திய குடியுரிமை பெற்றவராக இருந்தால், அவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள்.
- 2004 டிசம்பர் 3 க்கு பிறகு ஒருவர் குடியுரிமை பெறவேண்டும் என்றால் : அவர் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும், மேலும் பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாகவும் மற்றொரு பெற்றோர் சட்டப்படி இந்தியாவில் குடியேறியவராகவும் இருக்க வேண்டும்.
வம்சாவழியாக (By Descent):
- 1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10 வரை வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை:வெளிநாட்டில் பிறந்தவர், அவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியராக இருந்தால், அந்த குழந்தை இந்திய குடியுரிமை பெறலாம்.
- 2004 டிசம்பர் 3க்கு பிறகு வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை பெற, குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் குழந்தையின் பிறப்பு அந்நாட்டு இந்திய தூதரகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
பதிவு மூலம் (By Registration):
இந்த முறையில் இந்தியாவில் வசிக்கும் சில சிறப்புப் பிரிவினருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.
- இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள்.
- இந்திய குடிமகனுடன் திருமணம் செய்துகொண்டவர்கள்.
- இந்தியாவில் நீண்டகாலம் சட்டப்பூர்வமாக வசிக்கும் வெளிநாட்டினர் இது போன்றவர்கள் பதிவு செய்து இந்திய குடியுரிமையை பெறலாம்.
- இணைந்து குடியுரிமை பெறுதல் (By Naturalization): குறைந்தது 12 ஆண்டுகள் சட்டப்படி இந்தியாவில் வசித்த வெளிநாட்டினர் குடியுரிமை பெற தகுதி பெறுவார்கள்.
- அத்துடன் அவர்கள் தங்கள் நாட்டின் குடியுரிமையை நிறுத்திக்கொண்டு இந்தியாவில் வாழ வேண்டும்.
- நாட்டின் பகுதிகளை இணைப்பதன் மூலம் (By Incorporation of Territory): புதிய நிலபகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டால், அப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு குடியுரிமை தானாகவே வழங்கப்படும்.
இந்தியாவில், ஒருவர் மூன்று முக்கிய வழிகளின் மூலம் குடியுரிமை இழக்கலாம்:
1. துறத்தல் (Renunciation):
ஒரு இந்திய குடிமகன் தன்னார்வமாக இந்திய குடியுரிமையைத் துறக்க முடியும். இது பொதுவாக அவர் வேறு ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற விரும்பும் போது நிகழ்கிறது.
2. முடிவுறுதல் (Termination):
ஒரு நபர் தன்னார்வமாக வேறு ஒரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றால், இந்திய குடியுரிமை தானாகவே முடிவுறும்.
3. பறிப்பு (Deprivation):
இந்திய அரசு சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒருவரின் குடியுரிமையைப் பறிக்க முடியும். இதற்கான காரணங்கள்:
- மோசடி அல்லது தவறான தகவல்களின் அடிப்படையில் குடியுரிமையைப் பெற்றல்.
- இந்திய அரசியலமைப்பிற்கு விரோதமாக செயல்படுதல்.
- போரின் போது எதிரி நாட்டுக்கு ஆதரவாக செயல்படுதல்.
- ஒரு இந்திய குடிமகன் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இந்தியாவுக்கு வெளியே வசித்தால், அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது, குறிப்பாக ,அந்த நபர் ஒவ்வொரு ஆண்டும் அருகிலுள்ள இந்திய தூதரகத்தில் தனது இந்திய குடியுரிமையைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். ஏழு ஆண்டுகள் இந்த நடைமுறையை பின்பற்றவில்லை என்றால் அவரின் குடியுரிமை பறிக்கப்படும். இந்த விதிமுறைகள் இந்திய குடியுரிமை உள்ள நபர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் போது, இந்தியாவுடனான தொடர்புகளை பராமரிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை.
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA 2019)
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (Citizenship Amendment Act, 2019) என்பது குறிப்பாக பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த ஆறு மதக்குழுக்களுக்கு (இந்து, சீக்கியர், பௌத்தர், ஜைனர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள்) இந்திய குடியுரிமையை விரைவாக வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது.
2014 டிசம்பர் 31 க்கு முன்பு இந்தியாவிற்குள் வந்திருந்தவர்களுக்கு மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற தகுதி உண்டு. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது என்பதால் பலர் அதனை மத அடிப்படையில் வேறுபாடு காட்டுவதாக விமர்சித்தனர். குடியுரிமை பெற இந்த ஆறு மதத்தினர் 12 ஆண்டுகள் இல்லாமல், 6 ஆண்டுகள் மட்டுமே இந்தியாவில் வசித்திருந்தால் போதுமானது. குடியுரிமை திருத்த சட்டத்தின் பிரிவு 14A இந்தியர்கள் அனைவருக்கும் குடியுரிமை அடையாள அட்டை வழங்கி அவர்கள் அனைவரும் இந்தியர்களாக தங்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த இந்த குடியுரிமை திருத்த சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
இங்கு என்ன பிரச்சினை உள்ளது என்பதை புரிந்துகொள்ள நாம் வரலாற்றையும் உற்று பார்க்க வேண்டும். இந்திய பிரிவினையின் போது வங்காளம் பிரிக்கப்பட்டு கிழக்கு பாகிஸ்தான் உருவானது. பின் 1970ல் ஏற்பட்ட கிளர்ச்சியால் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் என்ற தனி நாடாக உருவானது. 1970 வரை கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பல்வேறு மக்கள் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளால் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்தனர். இவர்கள் அசாம்,திரிபுரா பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வந்தனர். அப்படி குடியேறிய மக்கள் காலப்போக்கில் இந்திய அரசின் நலத்திட்டங்களை பெற்று இந்திய குடிமக்களாக வாழ ஆரம்பித்தனர். இந்த குடியேற்றம் உள்ளுர் மக்களுக்கு தொழில்,வேலைவாய்ப்பு, கலாச்சாரம், பண்பாடு என அனைத்து விஷயங்களிலும் மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்தது. அதனால் 1979ல் அனைத்து அசாம் மாணவர்கள் சங்கம் தலைமையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உடனடியாக அசாமில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என போராட தொடங்கினார்கள். இதற்கு தீர்வாக கையெழுத்தானது தான் “அசாம் உடன்பாடு”.
அசாம் உடன்படிக்கையில் குடியுரிமை தொடர்பான விதிமுறைகள் பின்வருமாறு:
ஜனவரி 1, 1966க்கு முன்னர் வந்தவர்கள்:
ஜனவரி 1, 1966க்கு முன் அசாமில் குடியேறியவர்கள் இந்திய குடியுரிமை பெறும் உரிமையை பெற்றவர்களாக கருதப்படுவார்கள். இவர்கள் முழுமையான அரசியல் உரிமைகளையும் பெறுவார்கள்.
1966 முதல் 1971 வரை வந்தவர்கள்:
1966 ஜனவரி 1 முதல் 1971 மார்ச் 24 வரை அசாமுக்கு வந்தவர்கள் தங்களது சட்டபூர்வ இருப்பை உறுதி செய்ய வேண்டும். இவர்கள் 10 ஆண்டுகள் வரை வாக்கு உரிமை கிடையாது, அதன் பின்னர் முழுமையான குடியுரிமை வழங்கப்படும்.
1971க்கு பிறகு வந்தவர்கள்:
1971 மார்ச் 25க்கு பின்னர் அசாமுக்கு வந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகக் கருதப்பட்டு, அவர்கள் அசாமிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
இத்தகைய விதிமுறைகள் அசாமின் பண்பாட்டு மற்றும் சமூக அடையாளத்தை பாதுகாக்கவும், சட்டபூர்வ குடியிருப்பாளர்களின் உரிமைகளை உறுதி செய்யவும் உருவாக்கப்பட்டன.
புதிய சட்டமும் அதன் சிக்கல்களும்
தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது 1951ஆம் உருவாக்கப்பட்டது, ஆனால் அது பல வருடங்களாக புதிப்பிக்கபடாமல் இருக்கிறது. 2003ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், அனைத்து மக்களும் கட்டாயம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. 2013ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அசாமில் குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி 2015ஆம் அசாம் மக்களை பதிவுசெய்யும் பணி தொடங்கியது. அசாமை சேர்ந்தவர்கள் அனைவரும், தாங்கள் 24 மார்ச் 1971க்கு முன்பு இந்தியாவிற்குள் வந்தவர்கள் என்ற சான்றை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
2018ல் அன்றைய ஆளும் பிஜேபி அரசு புதுப்பிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை வெளியிடப்பட்டது. இங்கு தான் பிரச்சினை ஆரம்பம் ஆனது. புதிய பதிவேட்டில் சுமார் 20 லட்சம் அசாம் மக்களின் பெயர்கள் விடுபட்டு போயிருந்தது. இது மொத்த அசாம் மாநில மக்கள் தொகையில் ஆறு சதவீதம். பதிவேட்டில் பெயர்கள் இல்லாதவர்கள் ஒரு தீர்ப்பாயம் மூலம் தங்கள் தரப்பு சான்றுகளை சமர்ப்பித்து அவர்கள் இந்தியர் தான் என்று நிருபிக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியது. “ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால் அவர் குற்றவாளி அல்லது குற்றமற்றவர் என்று நிருபிக்கும் பணி காவல்துறை மற்றும் நீதித்துறையின் பொறுப்பு, குற்றம் செய்ததற்கு தகுந்த ஆதாரம் இல்லை என்றால் அவர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுவார்”, ஆனால் இந்த விஷயத்தில் வெளிநாட்டவர் சட்டம் 1946ன் படி சான்றுகளை சமர்ப்பித்து உண்மையை நிருபிக்கும் பணிக்கு முழு பொறுப்பும் குற்றம் சாட்டப்பட்ட தனிநபருக்கு தான். அவரால் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை என்றால் அவரின் குடியுரிமை பறிக்கப்படும்.நில பத்திரம், திருமண சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஊராட்சி சான்றிதழ், கிராம இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல், 1951ஆம் ஆண்டின் குடிமக்கள் பதிவேடு இப்படி எந்த சான்றிதழும் குடிமக்கள் என்று நிருபிக்க ஏற்றுக்கொள்ளப்படாது.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மதம் ஒருவர் குடியுரிமை பெறுவதற்கான அளவுகோலாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதை நாம் சாதாரணமாக கடந்து விட்டு செல்ல முடியாது காரணம், இந்த மதத்தின் அடிப்படையிலான குடியுரிமை என்பது மறைமுகமாக மக்களின் மனதில் இந்தியா இந்துக்களுக்கான தேசம் என்ற கோட்பாட்டை புகுத்துகிறது, இஸ்லாமியர்களே பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று மறைமுகமாக கூறுகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்று இங்கு விளக்குகிறேன்..
குடிமக்கள் பதிவேட்டில் பெயர்கள் விடுபட்டு போன மக்கள் தங்கள் குடியுரிமைக்கான சான்றை நிருபிக்கவில்லை என்றால் அவர்கள் அகதிகளாக மாற்றப்படுவார்கள். அதே சமயம் அவர்களில் இஸ்லாமியர்களை தவிர அனைவரும் ஐந்தாண்டு இங்கு வசித்து, எளிதில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்து விட முடியும், இஸ்லாமியர்களால் அப்படி விண்ணப்பிக்க இந்த புதிய சட்டம் அனுமதிக்காது.அந்த இஸ்லாமியர்கள் உண்மையான இந்தியர்களாக இருந்தாலும் அவர்கள் வங்கதேசத்திற்கு அல்லது பாகிஸ்தானுக்கோ நாடு கடத்தப்படுவார்கள் அல்லது இங்கேயே அகதிகளாக மாற்றப்படுவார்கள்.
“நாங்கள் மதச்சிறுபான்மையினரை பாதுகாக்கவே இந்த சட்டத்தை கொண்டு வருகிறோம்” என்று ஆளும் அரசாங்கம் கூறும் மிக பெரிய விஷம பொய்யை ஒருபோதும் நம்பி விடாதீர்கள், அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இஸ்லாமியர்கள் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் சிறுபான்மையினர் தான். அதேபோல் மியான்மர் மற்றும் இலங்கையில் புத்த மதம் பெரும்பான்மையான மதம், அந்த நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் அதாவது மியான்மரின் ரோஹிங்கியா மக்களும் இலங்கையில் உள்ள தமிழர்களும் இனவெறி தாக்குதலால் இந்தியாவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு இந்த சட்டம் எந்த குடியுரிமையும் வழங்காது, இங்கு நம் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் மற்றும் வடக்கில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மிக மோசமான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் பாகிஸ்தானின் சிறுபான்மையினரான அகமதியா முஸ்லிம்களும் இந்த சட்டத்தால் குடியுரிமை பெறமுடியாது. இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இலங்கை தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தான், ஆக இவர்களின் நோக்கம் சிறுபான்மையினரை பாதுகாப்பது அல்ல தங்களின் பிரிவினை கோட்பாட்டை செயல்படுத்துவதே ஆகும்.
மற்றொரு பிரச்சினை என்னவென்றால் அசாம் மக்கள், இந்த சட்டவிரோத குடியேற்றத்தால் மிக பாதிக்கப்பட்டு உள்ளனர், அதனால் தான் அசாம் உடன்பாடு ஏற்பட்டது, அதன்படி அசாமில் மார்ச் 24, 1971க்கு பிறகு குடியேறிய யாருக்கும் குடியரிமை தரக்கூடாது என்று கூறுகிறது. ஆனால் இந்த புதிய சட்டம் 2014 டிசம்பர் 31 வரை குடியேறிய இஸ்லாமியர்களை தவிர யார் வேண்டுமென்றாலும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது. இது அசாமின் பண்பாடு மற்றும் பொருளாதார தளத்தில் மிக பெரிய மாற்றம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும். நம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது இந்த சட்டம், காரணம் நம் அரசியலமைப்பு யார் ஒருவரிடமும் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது.
இந்தியாவில் வசிக்கும் பல அகதிகள் ஒரு மாடு வசிக்கும் நிலையை விட மிக மோசமான நிலையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தான் வாழ்கின்றனர். தங்கள் நாடுகளின் இனப்படுகொலைக்கு அஞ்சி தஞ்சம் அடையும் இவர்களை இங்கிருக்கும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் சக மனிதர்கள் என்ற மரியாதையை கூட தராமல் மிக மோசமாக நடத்துகின்றனர். இன்னும் சில பிரச்சனைகள் இருக்கிறது, பிறகு ஒரு தனி கட்டுரையில் பார்க்கலாம்.
நம் அடிப்படை உரிமைகளை நாம் சரியாக பயன்படுத்துகிறோமா…அதை பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
REFERENCE :







Comments
Post a Comment